இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்
தெரிந்து கொள்வோம்
இலங்கை ஆண்ட கடைசி
தமிழ் மன்னன் சிறைபட்டது,
இறந்தது, கல்லறை உள்ளது
வேலுாரில் தான்
வேலுார் –
மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள் இலங்கை கண்டியில் ஆட்சி செய்து வந்தனர். கி.பி., 1739 ம் ஆண்டு முதல் கி.பி., 1747 ம் ஆண்டு வரை விஜயராச சிங்கனும், கி.பி., 1747 ம் ஆண்டு முதல் கி.பி., 1782 ம் ஆண்டு வரை கீர்த்திராச சிங்கனும், கி.பி., 1782 ம் ஆண்டு முதல் கி.பி., 1798 ம் ஆண்டு வரை ராஜாதிராச சிங்கனும் ஆண்டனர்.
அதன் பின் விக்ரமராச சிங்கன் என்பவர் கி.பி., 1798 ம் ஆண்டு முதல் கி.பி., 1815 ம் ஆண்டு வரை 17 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தார். அவரை எப்படியாவது கப்பம் கட்ட வைக்க வேண்டும் என ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. அது முடியாததால், நான்கு முறை போர் தொடுத்தனர்.
மூன்று முறை ஆங்கிலேயர்களை விரட்டியடித்த விக்ரம ராச சிங்கனை நான்காவது முறை அவரது தளபதிகளின் ஒருவர் துரோக புத்தியால் தோல்வியடைய நேர்ந்தது.
இதனால் கி.பி., 1816 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ம் தேதி விக்ரமராச சிங்கனையும், பட்டத்து ராணி சாவித்திரி தேவி, இரண்டாவது மனைவி ராஜலட்சுமி தேவி மற்றும் குடும்பத்தினரையும் சிறை பிடித்த ஆங்கிலேய அரசு கப்பல் வழியாக அழைத்து வந்து வேலுார் கோட்டையில் உள்ள ஒரு மாளிகையில் அடைத்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட விக்ரமராசா சிங்கன் எப்படியாவது சூழ்ச்சி செய்து தப்பி மீண்டும் கண்டியை பிடித்து விடுவார் என உளவு அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர். இதனால் பயந்த ஆங்கிலேய அரசு விக்ரமராசா சிங்கன் குடும்பத்தினரை கோட்டையில் ஒரு வீட்டிலும், மன்னனை மட்டும் கோட்டையில் உள்ள ஒரு அலுவகத்தை சிறையாக மாற்றி அதில் இருந்த ஒரு சின்ன அறையில் அடைத்து வைத்தனர்.
தினமும் சாப்பாடு தவிற மற்ற நேரங்களில் அறை மூடப்பட்டிருக்கும். காற்றுக்காக சிறு ஜன்னல் மட்டும் இருந்தது. மன்னரை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. சிறை காவலர்களிடம் பேசியது தெரிந்தால், காவலருக்கு சவுக்கடி விழும். ஆண்டுக்கு 3 முறை முகக்கவசம் செய்ய அனுமதிக்கப்படும். குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கிடையாது.
இது போன்ற கெடுபிடிகளில் இருட்டு அறையிலேயே 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த மன்னர் நோய்வாய்பட்டு கி.பி., 1832 ம் ஆண்டு ஜன., மாதம் 31ம் தேதி இறந்தார்.
அவரது உடல் வேலுார் காட்பாடி செல்லும் சாலையில் உள்ள பாலாற்றிங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவிகள் சாவித்திரி தேவி, ராஜலட்சுமி தேவி, மகன் ரங்கராசா, கொள்ளு பேரன் நரசிம்ம ராசா மற்றும் உறவினர்கள் என ஒவ்வொருவராக இறக்கவே அவர்கள் உடல்கள் மன்னர் கல்லறைக்கு அருகிலேயே ஆங்கில ஆட்சியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி வரை அந்த கல்லறைகளை அடிக்கடி சுத்தம் செய்து வந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின் இந்த கல்லறைகளை அரசும், மக்களும் மறத்து விட்டனர். பாலாற்றில் துணிகள் துவைக்கும் சலவைக்கல்லாக உபயோகப்படுத்தினர்.
ஆனால் ஆங்கில ஆட்சியாளர்கள் செய்த நல்ல காரியம் ஒவ்வொரு கல்லறையிலும் அவர்கள் குறித்த விவரங்களை எழுதி விட்டு சென்றனர். அதன் பின்னர் இலங்கையில் தமிழர் பிரச்சனை பெரியதாக வெடித்தது. அப்போது தான் இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் கல்லறை சலவைக்
கல்லாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதை தினமலர் நாளிதழ் தான் வெளிப்படுத்தியது.
அப்போது வேலுாரில் தினமலர் நிருபராக பணியாற்றி வந்த திரு. எ. தினகரன் இது குறித்து விரிவாக தினமலரில் எழுதினார்.
இதனால் அப்போதைய ஆட்சியாளர்களால் கண்டி மன்னர், அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 2.12 ஏக்கர் பரப்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் முத்து மண்டபம் அமைக்கப்பட்டு 1990ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது.
ஆண்டு தோறும் அவர் இறந்த அன்று நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. வேலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் முத்து மண்டபம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு:
விக்ரமராச சிங்கன் ஆட்சியில் 240 கடற்படை கப்பல்கள், 2,000 யானை படை வைத்திருந்தார். இதனால் இவர் மீது நான்கு முறை போர் தொடுத்து தான் ஆங்கிலேயர்களால் பிடிக்க முடிந்தது. இவரது ஆட்சியில் வரிகளை குறைத்து மானியங்களை அதிகரித்ததால் மக்கள் சுபிச்சமாக வாழ்ந்தனர். கண்டியில் உள்ள தலதா மாளிகையில் உல்லாசமாக வாழ்க்கை நடத்தினார். அடிக்கடி சதுரங்கம் ஆடும் பழக்கம் உடையவர்.
இதற்காக சதுரங்க காய்கள், பெட்டியை தந்தத்தினால் செய்திருந்தார். தந்தத்தினால் ஆன பூமராங் என்ற போர்க்கருவியை தற்காப்பிற்காக மன்னர் பயன்படுத்தி வந்தார். மன்னரை கைது செய்து வேலுாருக்கு அழைத்து வந்த போது அவற்றையும் ஆங்கிலேயர்கள் எடுத்து வந்து விட்டனர்.
ஆனால் கடைசி வரை மன்னர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும், சிறையில் அவரை சதுரங்கம் ஆட அனுமதிக்கவில்லை.
மன்னன் ஆடிய தந்தத்தினால் ஆன சதுரங்க பலகை, காய்கள், பெட்டி ஆகியவை வேலுார் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இப்போதும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..ஆந்திரா சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர்:இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு வேலுார் கோட்டை தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. கண்டி மன்னர் சிறை வைக்கப்பட்ட வீடு பத்திரப்பதிவுத்துறை அலுவலகமாக நீண்ட காலம் இருந்தது.
ஆனால் 16 ஆண்டுகள் மன்னர் அடைக்கப்பட்டு இறந்த அறையை திறந்தால் கண்டி மன்னரின் ஆவி பழிவாங்கி விடும் என்ற பயத்தினால் ஊழியர்கள் அந்த அறையை திறக்க பயந்து பூட்டு போட்டு பூட்டி விட்டனர்.
அறைக்கு வெளி கதவில் ஏராளமான சுவாமி படங்களை மாட்டியும், தாயத்துக்களை கட்டி வைத்திருந்தனர். அப்போது ஆந்திரா மாநிலத்தில் வேலுார் மாவட்டம் முழுவதும் இருந்தது. ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரும், அம்மாநில முதல்வருமாக இருந்த என்.டி., ராமாராவ் ஆரம்பத்தில் பத்திரப்பதிவுத்துறையில் சித்துாரில் எழுத்தராக பணிற்றினார்.
பின் பத்திரப்பதிவு அலுவலராக பதவி உயர்வு பெற்று வேலுாருக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்ததும் ஆவி பற்றிய தகவல் அவருக்கு தெரியவந்தது. பெருமாள் பக்தரான அவர் பூஜைகள் செய்து தைரியமாக கண்டி ராஜா சிறையில் வாழ்ந்த அறையை திறந்து அனைவரையும் அழைத்துச் சென்று காண்பித்தார்.
அப்போது தான் கண்டி மன்னர் சிறையில் எப்படி துன்பங்களை அனுபவித்தார் என்பது மக்களுக்கு தெரியவந்தது. ராமராவ் பணியாற்றிய இரண்டு ஆண்டுகள் வரை அந்த அறை திறந்தே இருந்தது. அவர் மீண்டும் பணி மாறுதலில் சென்ற பிறகு பயத்தினால் அறை மூடப்பட்டது.
தற்போது பத்திரப்பதிவு அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த அலுவலகம் பழுது பார்க்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு சில மாதங்கள் திறந்து வைக்கப்பட்டது.
மறக்கடிக்கப்பட்ட வாரிசுகள்:
ஆங்கிலேயர்கள் சிறை வைத்திருந்தாலும் கண்டி மன்னரின் குடும்பத்தினருக்கு மாதா மாதம் ஓய்வூதியம் அளித்து வந்தனர். நாடு சுதந்திரத்திற்கு பிறகு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் கண்டி மன்னரின் வாரிசுகளில் சிலர் கூலி வேலை செய்தும், ஒருவர் சத்துவாச்சாரியில் உள்ள சினிமா தியேட்டரில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர். இதையும் தினமலர் வெளிப்படுத்தியது. ஆனால் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
படங்கள்:
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரமராச சிங்கன்.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரமராச சிங்கன் கண்டியில் வாழ்ந்த தலதா மாளிகை.
வேலுார் கோட்டையில் கண்டி மன்னர் சிறை வைக்கப்பட்ட அறை.
கண்டி மன்னர் விளையாடிய தந்தத்தினால் ஆன சதுரங்க பலகை, காய்கள், பெட்டி.
கண்டி மன்னர் வரலாறு குறிக்கும் பலகை.
கண்டி மன்னர் கல்லறை உள்ள முத்து மண்டபம்.
கண்டி மன்னர் பயன்படுத்திய தந்தத்தினால் ஆன பூமராங் என்ற போர்க்கருவி.
குறிப்பு: வேலுாருக்கு சுற்றுலா செல்பவர்கள் வேலுார் கோட்டையில் உள்ள இந்த இடத்தை பார்த்து விட்டு வரலாம்.
படம், கட்டுரை: எ. தினகரன், தினமலர் மூத்த நிருபர் (பணி நிறைவு) சென்னை
சூப்பர்
ReplyDelete