பிரியாணிக்காக தயாராகும் கத்திரிக்காய்

 பிரியாணிக்காக தயாராகும்
முள்ளுக்கத்திரிக்காய்

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே இலவம்பாடியில்,  சாகுபடியாகும் முள்ளுக்கத்திரிக்காய்  புகழ் பெற்றது. இதற்கு வேலுார் கத்திரிக்காய் என்ற பெயரும் உள்ளது.
உண்மையில் அதில் முள் இருக்கும். கொஞ்சம் கவனக்குறைவாக தொட்டாலும் கையில் முள்  குத்தி ரத்தம் வரும் அளவுக்கு செய்து விடும்.
ஆனால் அதனுள் இருக்கும் சுவேயை தனி. இதில் சொத்தையும் இருக்கும். புழுவும் இருக்கும். சொத்தை அகற்றி விட்டு, புழுவை வெளியேற்றி மஞ்சள் கலந்த வென்னீரில் போட்டு கழுவி சமைப்பார்கள்.
இப்போது ஆர்கானிக் முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் சத்தமில்லாமல் இலவம்பாடி முள்ளுக் கத்திரிக்காய் மட்டும் இயற்கையான முறையில் விளைவிக்கப்படுகிறது.
திருப்பத்துார் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி, உம்மராபாத், ஜாபராபாத், வேலுார் மாவட்டத்தில், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேல் விஷாரம், கீழ் விஷாரம், ஆற்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டன், சிக்கன் பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள இலவம்பாடி முள்ளுக்கத்திரிக்காய் தேடிப்பிடித்து வாங்கி வந்த எண்ணெய் கத்திரிக்காய் கொஸ் செய்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.
வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பாருங்கள்.  அந்த பிரியாணிக்கு இந்த கத்திரிக்காய் தொக்கு எனப்படும் கொஸ் செம டேஸ்ட். பிரியாணிக்கு ஈடு கொடுக்கும் இணையற்ற காமினேஷன் அது.
கத்திரிக்காயின் சுவை பிரியாணியின் சுவையை விட அதிகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இலவம்பாடி முள்ளுக்கத்திரிக்காய் நடவு செய்த 45 நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை தொடர்ந்த அறுவடை செய்யலாம். 
 நான்கு மாதத்தில் 10 டன் காய் அறுவடை செய்யலாம். உற்பத்தி செலவு போக ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய 8 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட நாற்றங்கால் தேவை. 500 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ அசோஸ் பைரில்லம் உரம் ஆகியவற்றை கலந்து துாவ வேண்டும்.
பிறகு 200 கிராம் விதையை துாவி பூவாளியால் தண்ணீர் தெளிக்க  வேண்டும்.  பூச்சியை விரட்ட மூலிகை பொடிகள் கலந்து ஆறு கிலோ உரம் துாவ வேண்டும். 3 டன் தொழு உரம் கொட்ட வேண்டும். நிலத்தின் ஈரப்பத்தை பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 நாளில் களை எடுக்க வேண்டும்.  இவ்வவு செய்தால் முள்ளுக்கத்திரிக்காய் ரெடி.
இன்றைய நிலை: 50 ஆண்டுகளுக்கு மேலாக வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே இலவசம்பாடி, அப்துல்லாபுரம், பொய்கை மோட்டூர் என 25 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கறுக்கு மேல் முள்ளுக்கத்திரிக்காய் சாகுபடி செய்தனர்.
பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் இப்பகுதிகளில் 1,000 அடி முதல் 1,500 அடி வரை போர் போட்டும் உப்பு தண்ணீர் தான் கிடைக்கிறது. மண்ணின் தன்மை மாறியது. ஈரப்பதம் குறைந்தது. முள்ளுக்கத்திரிக்காய் சுவை குறைந்து, விற்பனையும் குறைந்தது. படிப்படியாக முள்ளுக்கத்திரிக்காய் சாகுபடி செய்வது நிறுத்தப்பட்டது. 
 இலவம்பாடியில் மட்டும 100 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வந்தனர். இங்கும் தண்ணீர் குறைந்ததால்,  மினரல் வாட்டர் வாங்கி  சாகுபடி செய்து வந்தனர். விலை கட்டுபடியாகவில்லை, சுவை இல்லை என்பதால் சில ஆண்டுகளுக்கு முன்பு  சாகுபடி நிறுத்தப்பட்டது.
முன்பு ஆம்பூர், வாணியம்பாடி, வேலுார், ஆற்காடு, மேல்விஷாரம் பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகளில் இலவம்பாடி முள்ளுக்கத்திரிக்காய் வாங்கி கொஸ் செய்து தங்கள் வியாபாரத்தை அதிகமாக்கினர்.
முள்ளுக்கத்திரிக்காய் சாகுபடி குறைந்ததால் பிரியாணி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.  இதனால் விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து முள்ளுக்கத்திரிக்காய்களை வாங்கிக் கொள்வதாகவும், அதற்கு முன் பணம் கொடுப்பதாகவும் பிரியாணி ஓட்டல் உரிமையாளர்கள் இலவம்பாடி விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
தற்போது 20 விவசாயிகள் மட்டும் 25 ஏக்கர் நிலத்தில் முள்ளுக்கத்திரிக்காய் சாகுபடி செய்கின்றனர்.
அவை மார்க்கெட்டுக்கு வருவதில்லை. தங்கள் சொந்த தேவைக்கு போக மற்றவற்றை பிரியாணி ஓட்டல்களுக்கு விற்று விடுகின்றனர்.  
ஒரு கிலோ முள்ளுக்கத்திரிக்காய் விலை 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை போகிறது. சமயத்தில் கிலோ 600 ரூபாய் வரை விற்கிறது.
இலவம்பாடி முள்ளுக்கத்திரிக்காய்  விவசாயிகள் கூறியதாவது: இப்போது அதிகளவு உரம், தண்ணீர் செலவழித்து முள்ளுக்கத்திரிக்காய் சாகுபடி செய்கிறோம்.
லாபம் குறைவு. ஆனால் அதே சுவை உள்ளது.
பிரியாணி ஓட்டல்காரர்கள் தினமும் வந்து வாங்கிச் செல்கின்றனர். தெரிந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருமணம் நிகழ்ச்சி நடத்துபவர்கள் கேட்டால் தருகிறோம்.
பலர் சென்னையிலிருந்து காரில் வந்து வாங்கிச்செல்கின்றனர். வேலுார், சென்னையில் விற்கப்படும் முள்ளுக்கத்திரிக்காயில் 
சுவை இருக்காது.
பாலாற்றில் தண்ணீர் வந்தால் தான் இங்குள்ள ஏரிகள் நிரம்பும். அப்போதுதான் இந்த பிரச்சனை தீரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்