ஹரியின் பெருமை
*பராசரர் ஹரியின் பெருமைப் பற்றி கூறுகிறார்...*
#பத்த:#பரிகரஸ்தேந_மோக்ஷாய_கமநம்_ப்ரதி ।
#ஸக்ருதச்_சாரிதம்_யேன_ஹரிரித்யக்ஷரத்_வயம் ।।
எவனொருவனால் #ஹரி என்னும் இவ்விரண்டு எழுத்துக்களும் ஒரு தடவை சொல்லப்பட்டனவோ, அவனால் மோக்ஷம் செல்வதற்குச் செய்ய வேண்டிய காரியங்களெல்லாம் செய்யப்பட்டன.
திருப்பாவையில் ஆறாம் பாட்டின் (புள்ளும்) ஈற்றடியில் #உள்ளம்_புகுந்து_குளிர்ந்து என்ற வரி வருகிறது. இங்கு உள்ளம் குளிர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எதனால் குளிர்ந்ததெனில் அரியென்ற பேரரவம் உட்புகுந்ததனாலென்று சொல்லப்பட்டுள்ளது. அரியென்ற பேரரவம் யாருடையதென்னில், முனிவர்களும் யோகிகளுமானவர்களினுடையதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குமே வாசி உண்டு.கேண்மின்! பகவத் ப்ரவணர்களில் இரு வகுப்புண்டு. குணாநுபவ நிஷ்டர்கள் என்றும், கைங்கர்ய நிஷ்டர்கள் என்றும். பரதாழ்வான் போல்வார் குணாநுபவ நிஷ்டர்கள். இளையபெருமாள் போல்வார் கைங்கர்ய நிஷ்டர்கள். ஆக, இந்த வாசியைப் பற்றவே ஆங்காங்கு இரண்டு சொற்களையிட்டுச் சொல்வது.முனிவர்களும் யோகிகளும் என்றவிடத்தும் இவ்விரு வகுப்பினர்களே விவஷிதர்களாகக் கடவர்கள்.இவர்கள் பள்ளியை விட்டெழுந்திருக்கும் போது #ஹரி_ஹரி_ஹரி என்று உத்கோஷித்துக் கொண்டே எழுந்திருக்கிறார்களாம்.
ஹரி என்னும் சொல்லுக்கு மூன்று பொருள்கள் பிரஸித்தமானவை. தென்மொழியில் ஹகாரம் கிடையாது. ஆதலால் ஹரி என்ற வடசொல் அரியெனத் திரியும். பத்து பொருள்களையுடைய அந்த வடசொல்லுக்கு நாராயணன் என்ற பொருளும், சிங்கமென்ற பொருளும் திவ்யப்ரபந்தங்களில் பிரஸித்தமாக உள்ளன. அரி என்றே ஒரு வடசொல் உண்டு. அதற்கு விரோதி என்று பொருள். திருப்பல்லாண்டில் #அந்தியம்_போதிலரி_யுருவாகி_அரியை_அழித்தவனை என்றவிடத்து முதலிலுள்ள அரி சிங்கமென்ற பொருளிலும், இரண்டாவதாகவுள்ள அரி விரோதி என்ற பொருளிலும் பிரயோகப்பட்டிருப்பது காணலாம். அரியென்ற பேரரவமென்ற இவ்விடத்து மேலே காட்டின முப்பொருளும் விவஷிதமே.
இப்படி ஹரி நாமத்தை உச்சரித்தால், உள்ளத்தில் உறையும் எம்பெருமான் குளிர்ந்து நமக்கு மோக்ஷமளிப்பான் என்பது திண்ணம்.
********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********
Comments
Post a Comment