10 ஆண்டுகளில் செய்ய தவறியதை ஓராண்டில் செய்து முடித்துள்ளோம் முதல்வர் ஸ்டாலின்
10 ஆண்டுகளில் செய்ய தவறிய
அனைத்து பணிகளையும் கடந்த
ஓராண்டில் செய்துள்ளோம்
முதல்வர் ஸ்டாலின்
10 ஆண்டுகளில் செய்ய தவறிய அனைத்து பணிகளையும் கடந்த ஓராண்டில் செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் வேலுாரில் பேசினார்.
வேலுார் கோட்டை மைதானத்தில், தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 5:45 மணிக்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 62.10 கோடி ரூபாய் மதிப்புள்ள முடிவடைந்த திட்டப் பணிகள், 32.89 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளை தொடங்கி வைத்து, 30,423 பேருக்கு 360.53 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இளைஞரான என்னை பார்த்த அமைச்சர் துரைமுருகன் இப்போது தலைவராக பார்க்கிறார்.
எனக்கு சோதனை வந்த போது என்னை தாங்கி நின்ற துாண் துரைமுருகன்.
வேலுார் மாவட்டத்தில், 58 கோடி ரூபாய் மதிப்பில் பாலாறு, பொன்னையாற்றில் தடுப்பணைகள் கட்டும் திட்டம், காட்பாடி தொகுதி மகிமண்டலத்தில் 300 ஏக்கர் பரப்பில் சிப்காட், 120 கோடி ரூபாயில் காங்கேயநல்லுார்– சத்துவாச்சாரியை இணைக்கும் 3.2 கி.மீ., நிளமுள்ள உயர்மட்ட மேம்பாலம், குடியாத்தம், வேலுாரில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும்.
10 ஆண்டுகளில் செய்ய தவறிய அனைத்து பணிகளையும் கடந்த ஓராண்டில் செய்துள்ளோம்.
மத்திய அரசின் நிதி ஆதாரங்களில் அதிகளவு பங்களிப்பை தமிழக அரசு கொடுத்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம். மத்திய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8. 4 சதவீதம்.
ஆனால் தமிதமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் வழங்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே. இதனால் சென்னை வந்த பிரதமரிடம் நிதியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். காவேரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறோம்.
ஆனால் பொழுது போகவில்லை என்றால் அதை பற்றி பேசத் தொடங்குகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு காவேரி ஆணையத்தில் மேகதாது பிரச்சனையை விவாதிக்க உள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்தது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்ற போது, மேகதாது அணை குறித்து காவேரி ஆணையத்தில் விவாதிக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
காவேரி பிரச்சனையில் தமிழ்நாட்டில் உரிமை பாதிக்கப்படாமலிருக்க தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழ்நாட்டிற்கு நிதி உரிமை வேண்டும், சமூக நீதி, கல்வி, காவேரியில் உரிமை வேண்டும் என குரல் கொடுப்பதால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான குரல்கள் தான்.
எல்லா மக்களும் எல்லாம் பெற வேண்டும் என்பது தான் தி.மு.க., வின் கொள்கை. அனைத்து மக்களுக்காகவே தி.மு.க., அரசு இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், காட்பாடி தொகுதியில் எல்லாம் உள்ளது, ஒரு தொழிற் பேட்டை இல்லை, அதற்கான அறிவிப்ப்பை வெளியிட கோரிக்கை விடுத்திருந்தார்.
Comments
Post a Comment