என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன் முதல்வர் ஸ்டாலின்

55ஆண்டு காலம் அரசியலில்
உள்ள எனக்கு இனிமேல்
எதற்கு விளம்பரம்
முதல்வர் ஸ்டாலின்


55ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம் என ராணிப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 118.40 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ராணிப்பேட்டையில் தீரர் சத்தியமூர்த்தி அரசு நடுநிலைப்பள்ளிக்கு திடிர் என சென்ற முதல்வர் ஆய்வு செய்தார். மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளிக்கு தேவை குறித்த விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது நாங்கள் அனாதைகள் என மாணவர்கள் கூறியதை கேட்ட முதல்வர், இனிமேல் நான் இருக்கிறேன், நீங்கள் அனாதைகள் இல்லை என்று  கூறியதை கேட்ட மாணவர்கள் கண்ணீர்        விட்டனர்.
பின்னர் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 60, 577 பேருக்கு வழங்கிய முதல்வர், 32. 18 கோடி ரூபாய் மதிப்படில் 23 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.  
22. 19 கோடி மதிப்பில் 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புதியதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், முதலாவது, இரண்டாவது  உலகப் போரின் போது ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முக்கிய முகாமாக விளங்கியுள்ளது.
தமிழக– கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் இடமாக அமைந்துள்ளது. கனிம வளங்கள் நிறைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களின் 65 வதாக உள்ள சோளிங்கர் இந்த மாவட்டத்தில் உள்ளது.  தென்னிந்தியாவிலேயே சிறந்த தொழில் மையமாகவும், தோல் பொறுட்கள் உற்பத்தி மையமாகவும் உள்ளது.
மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திய மாவட்டமாக விளங்குகிறது.
இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் தொடர வேண்டும். இந்த மாவட்ட மக்களின் 71 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தோல் காலணி உற்பத்தி செய்வதோடு சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்காக ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் 400 கோடி மதிப்பில் 200 ஏக்கர் பரப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா தொடங்கப்படும்.
இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக பெண்கள் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்றும் சிலர் பேசுகின்றனர்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தவற்றில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் விளம்பர பிரியர் என்று கூறுகிறார்கள். 55ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு இனிமேல் எதற்கு விளம்பரம்.
நரிக்குறவர், இருளர் வீட்டுக்கு சென்றதால் அவர்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. இது மக்களின் அரசு என்பது வெளிப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக செய்யப்பட்டதல்ல.
நான் ஆட்சிக்கு வந்த போது, முன்னாள் முதல்வர்  படம் போட்டு பள்ளி மாணவர்களுக்கு  கொடுக்க வேண்டிய பைகள் ஏராளமான உள்ள தகவல் எனக்கு தெரியவந்தது. இதனால் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், முன்னாள் முதல்வர் படம் போட்ட பையை கொடுக்க சொன்னவன் தான் இந்த ஸ்டாலின்.
எனக்கு விளம்பரம் பெரிதல்ல. ஏற்கனவே எனக்கு கிடைத்த புகழே போதும்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவை சரி செய்து வருகிறது. என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன், உழைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, வேலு, மற்றும் மாநில சுற்றுச்சூழல் அணி இணை செயலாளர்வினோத் காந்தி , முனிரத்தினம் எம்எல்ஏ, ஈஸ்வரப்பன் எம்எல்ஏஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்