ஆள்சேர்ப்பு முகாம்
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி ஆள் சேர்ப்பு முகாம்
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி மாணவர்கள் ஆள் சேர்ப்பு முகாம் இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எம். ஜோதீஸ்வர பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். காட்பாடி காந்திநகர் 10வது பட்டாலியனின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவரும் என்சிசி பயிற்சிகளை முடித்து, ராணுவத்தில் சேர்ந்து இந்திய ராணுவத்தை வலுப்படுத்தி, பள்ளிக்கும், பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்து, அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசினார். 10வது பட்டாலியனின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்சிசி முதன்மை அலுவலர் க. ராஜா, பட்டாலியனின் சுபேதார் மேஜர் சத்பீர் சிங், சுபேதார்கள் தினேஷ் சிங் மற்றும் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. முனுசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நமது பாரதப் பிரதமர் அவர்கள் என்சிசி மாணவர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், அக்னிபத் திட்டத்திலும் இந்திய ராணுவ ஆள் சேர்ப்புக்கு என்சிசி மாணவர்களுக்கு முக்கிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. எனவே எல்லா என்சிசி மாணவர்களும் பயிற்சிகளை நன்கு மேற்கொள்ள வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்தி பேசினார். பின்னர் என்சிசி முகாமில், என்சிசி மாணவர்களது உடல் வலிமைத் திறன் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். உடல் வலிமைத் திறனில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பின்னர் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
என்சிசி ஆள் சேர்ப்பு முகாமில் பள்ளியின் ஆசிரியர்கள் சி. சுரேஷ்குமார், மணி சித்ரா, சிவசங்கரி, உடற்கல்வி ஆசிரியர் ஜெயசீலன் ஆகியோர் ஆள் சேர்ப்பு முகாமிற்கு ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.
Comments
Post a Comment