புறக்கணிப்பு
திருப்பத்துார் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை புறக்கணிக்கும் விளையாட்டு துறை
திருப்பத்துார்,செப்.
திருப்பத்துார் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை விளையாட்டு துறை புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தடகளம், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.
இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தி அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் வட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆனால், திருப்பத்துார் மாவட்டத்தில் வட்ட மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் முறைப்படி நடத்துவதில்லை.மேலும்
இப்போட்டிகளுக்கு முறையான பயிற்சிகள் எடுக்க மாணவர்களுக்கு எந்தவித அவகாசமும் கொடுக்காமல், ஓரிரு நாட்கள் முன்னதாக அவசரமாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்துகின்றனர்.
அதற்கான அறிவிப்புகள் முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்புவதில்லை.
மேலும்,இப்போட்டிகளில் கலந்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அரசு பள்ளிகள் புறக்கணிக்கின்றனர்.இதில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இப்போட்டிகளில் பங்கு பெறும் நிலையில், அரசு பள்ளிகளின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு நடக்கும் போட்டிகள் விதிமுறைகளின் படி நடக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு போட்டிக்கும் விதிமுறைகள் மாறுபடும். கால்பந்து ஆட்டத்தின் விதிமுறைகள் கைப்பந்து விளையாட்டுக்கு பொருந்தாது. ஆனால் போட்டி நடத்துனர்கள் தகுந்த விதிகளை கடைப்பிடிக்காமல் தன்னிச்சையாக விதிகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு தகுந்தார் போல் நடத்துகின்றனர். இதனால் திறமைபடைத்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தகுதியான உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், போட்டிகளை நடத்தும் பொறுப்பை தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டிகளையும் அதன் விதிமுறைகளை முழுக்க அறிந்துள்ள ஒருவரின் மேற்பார்வையில் நடத்த வேண்டும். போட்டிகளை சர்வதேச விதிகளை பின்பற்றி முறையாக நடத்த வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றால் முறையாக அரசிடம் கேட்டு பெற வேண்டும்.
கடந்த ஆண்டுகளின் நடந்த போட்டி தரவுகளை ஆராய்ந்து பார்க்கும் போது, மாநில அளவில் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் வெற்றி சதவீதம் என்பது மிகவும் குறைவுதான்.
எனவே,விளையாட்டு போட்டிகளை தகுந்த நிபுணர்களை கொண்டு முறையாக நடத்தி உண்மையான திறன் படைத்த மாணவர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment