சீல்
திருப்பத்தூர் அருகே பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவாய் சான்றிதழ் வழங்கிய மக்கள் இ-சேவை மையத்துக்கு வருவாய் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.
அரசு இ-சேவை மையங்களில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பவற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், திருப்பத்தூர் வட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான இ-சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் இ- சேவை மையங்களில் ஆய்வு நடத்தி விதிமீறி செயல்படும் இ-சேவை மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையிலான வருவாய் துறையினர் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில், திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் மக்கள் இ-சேவை மையத்தில் வருவாய் துறை சானறிதழ் வழங்க ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பதாரர்களிடம் ரூ.150 முதல் ரூ.200 வரை வசூலிப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, மக்கள் இ சேவை மையத்துக்கு வட்டாட்சியர் சிவப்பிரகாசம் சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, வருவாய் துறையினர் மக்கள் இ-சேவை மையத்துக்கு சீல் வைத்தனர். இதைதொடர்ந்து அந்த இ-சேவை மையத்தை நடத்தி வரும் பாஸ்கரனுக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
இதேபோல, வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி ஆகிய வட்டங்களிலும் இ-சேவை மையங்களில் வட்டாட்சியர்கள் நேற்று ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment