தெரியுமா
அமெரிக்காவில்
பிச்சைக் கூடம்
___________
கடந்த 2017 ஆம் ஆண்டு நான் அமெரிக்காவிற்கு என் இல்லத் தலைவியோடு சென்றிருந்தேன். கலிபோர்னியாவில் சான் ஜோஸ் எனும் நகரில் பே பால் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் என் மகன் அமானுல்லா உடன் தங்கியிருந்தேன். அவன் படித்த யூடா பல்கலைக்கழகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றான்.
அந்த யூட்டா மாநிலத்தின் தலைநகர் சால்ட் லேக் சிட்டி. அதனை உப்பேரி மாநகர் என தமிழாக்கிச் சொல்ல முடியும்.
அந்த நகரில் நாங்கள் தங்கி இருந்தபோது, அங்கு பிச்சைக்காரர்களுக்கென தனி கூடம் இருப்பதைச் சிலர் சுட்டிக் காட்டினர். ஆர்வ மிகுதியால் நாங்கள் சென்று பார்த்தோம்.
அங்கே ஒரு சிறிய கூடம்...நிறைய பிச்சைக்காரர்கள். தலைவிரி கோலமாகவும், பஞ்சைப் பராரிகளாகவும், கிழிந்த துணிகளோடும் நொடிந்த தேகத்தோடும், நொந்து நசிந்த உடலமைப்போடும், சிதறிக் கிடந்த காகிதக் குப்பைகள் போல் விழுந்து கிடந்தார்கள்.
சிலர் அந்த சாலையிலேயே அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது சிலர் அடிக்கடி அந்த பகுதிக்கு வந்து பிச்சைக்காரர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும், துணிமணிகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும், ஷூ மற்றும் செருப்புகளையும் வழங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அமெரிக்கா என்பது சீமான்களின் சொர்க்கலோகம் மட்டுமல்ல., பிச்சைக்காரர்களின் குடியிருப்புக் கொட்டடியும் கூட என்பதைக் காட்டும் பகுதியாக அவ்விடம் அமைந்திருந்தது.
பிச்சைக்காரர்கள் கூடுவதற்கு ஒரு இடம் இருக்கின்ற காரணத்தால், தர்மம் செய்ய விரும்புவோர் அங்கே வந்து கொடுத்துவிட்டுச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நமது நாட்டிலோ வீடு தேடி வந்து பிச்சை பெற்றுச் செல்வார்கள்.
ஆனால் அமெரிக்காவிலோ பிச்சை போட பிச்சைக் கூடத்திற்கு வருகிறார்கள் என்பது தான் சுவாரஸ்யம்.
கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டும்.
ஆர் நூருல்லா செய்தியாளன்
30-12-2022 9655578786
Comments
Post a Comment