இது தேவையா?
கூகுள் மேப் பார்த்தபடி
கார் ஓட்டியதால் மின் கம்பத்தில்
மோதி விபத்து
திருப்பத்துார்
ஏலகிரிமலையில் இருந்து சென்னைக்கு காரில் சென்றவர்கள் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் சென்றதால் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை மணலியை சேர்ந்தவர்கள் கிரீஸ், 24, மதியழகன், 22, முருகேசன், 26. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்கள் நேற்று (25) சென்னையிலிருந்து, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரிமலைக்கு இனோவா காரில் சுற்றுலா சென்றனர்.
ஏலகிரிமலையில் அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டு அன்று மாலை சென்னைக்கு செல்ல, ஏலகிரிமலையிலிருந்து கீழே இறங்கினர். காரை கிரீஸ் ஓட்டி வந்தார். கீழே இறங்கியதும் எப்படி சென்னைக்கு செல்வது என தெரியாததால் மலையில் இருந்து இறங்கும் போதே காரில் கூகுள் மேப் போட்டு பார்த்துக்கொண்டே ஓட்டி வந்தனர்.
ஏலகிரிமலை அடிவாரமான பொன்னேரி கூட்டு சாலைக்கு வந்த வலது பக்கம் திரும்பி புதுார் வழியாக சென்றால் சென்னை செல்லும் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து விடும் என்று கூகுள் மேப் காட்டியது.
எதிரே உள்ள சாலையை பார்த்துக் கொண்டு காரை ஓட்டாமல் கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டே ஓட்டி போது, புதுார் கூட்டு சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் கார் மோதியது. இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சையளித்தனர். கார் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.
மின் கம்பத்தை சேதப்படுத்தியதற்காக அவர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. காரும் சேதமடைந்தது. ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரில் செல்பவர்கள் வழி தெரியாவிட்டாலும் கூகுள் மேப் பார்த்துக் கொண்டு செல்லும் வசதி உள்ளது. ஆனால் கூகுள் மேப்பை மட்டும் பார்த்துக் கொண்டு காரை ஓட்டினால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படும்.
Comments
Post a Comment