யூரியா வந்தது
1,450 டன் யூரியா காட்பாடி ரயில் நிலையத்திற்கு வருகை
விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 5 மாவட்டங்களுக்கு
படம் உள்ளது
வேலூர், டிச
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 5 மாவட்டங்களுக்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் 1,450 டன் யூரியா காட்பாடி ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ததன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. தொடர் மழையால் அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் அந்தந்த மாவட்டங்களில் அதிகளவு இருப்பு வைத்து விநியோகம் செய்யும்படி வேளாண்மைத்துறை உத்தரவிட்டது. மேலும் மழை, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சேதமானால் அதற்கு இழப்பீடு வழங்கும் வகையில் பயிர் காப்பீடு செய்யும்படி விவசாயிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் விவசாய பயிர்களுக்கு தேவையான 1,450 டன் யூரியா மூட்டைகள் சென்னை மணலியில் இருந்து காட்பாடிக்கு நேற்று சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த யூரியா மூட்டைகள் மாவட்டம் வாரியாக பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 350 டன், ராணிப்பேட்டைக்கு 950 டன், திருப்பத்தூருக்கு 50 டன், காஞ்சிபுரத்திற்கு 25 டன, செங்கல்பட்டுக்கு 75 டன் உரங்கள் வேளாண்மை அதிகாரிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறுகையில், வேலூர் மாவட்டத்திற்கு தேவையான உரங்கள தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் உரங்கள் இருப்பு உள்ளது. எந்தெந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறதோ அந்தந்த பகுதி விவசாயிளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். அரசு நிர்ணயித்துள்ள கட்டண விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
Comments
Post a Comment