தூக்கு சாலை மறியல் புகார்
வேலுார் அருகே
போலீசார் விசாரணைக்கு அழைத்ததால்
பா.ம.க., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை
தி.மு.க., வினர் மிரட்டியதால் தற்கொலை என
புகார் செய்து உடலை வாங்க மறுத்து மறியல்
வேலுார்
போலீசார் விசாரணைக்கு அழைத்ததால், பா.ம.க., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தி.மு.க., வினர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளத்து உடலை வாங்க மறுத்து பா.ம.க., வினர் மறியலில் ஈடுபட்டனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே பெரியபோடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ், 55. பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளர். இவரது வீட்டுக்கு அருகிலிருந்த காலியிடத்தில் வாழை, முருங்கை மரம், பூச்செடிகள் வளர்ந்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், 50, என்பவர் அரசு புறம்போக்கு இடத்தை நாகேஷ் அபகரித்துக் கொண்டதாகவும், இதனால் 6 தெருக்களை சேர்ந்தவர்கள் செல்ல முடியவில்லை என்று மேல்பாடி போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து வருவாய்த்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெருமாள்குப்பம் தி.மு.க., தலைவர் கோட்டீஸ்வரன், பெரியமோடிநத்தம் தி.மு.க., துணை தலைவர் அரி சிவலிங்கம் ஆகியோர் ஜெ.சி.பி., மூலம் தான் வளர்த்து வந்த மரம், பூச்செடிகைளை அழித்து விட்டதாக கடந்த 3 ம் தேதி மேல்பாடி போலீஸ் ஸ்டேஷனில் நாகேஷ் புகார் செய்தார்.
இந்த புகாரின் மீது விசாரணை நடத்த மேல்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்று (26) தேதி காலை 10:00 மணிக்கு வரும்படி போலீசார் நாகேசை அழைத்திருந்தனர். ஆனால் விசாரணைக்கு செல்லாமல் காலை 5:00 மணிக்கு அவரது நிலத்தில் உள்ள மரத்தில் நாகேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தி.மு.க., வை சேர்ந்த வேல்முருகன் தலைமையில்
அடியாட்கள் வந்து நாகேசுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். விசாரணைக்கு அழைத்து அவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யவும் திட்டமிட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான வேல்முருகன், கோட்டீஸ்வரன், அரிசிவலிங்கம் ஆகியோரை கைது செய்ய நாகேசின் தம்பி பாலாஜி, 42, என்பவர் மேல்பாடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகேசின் உடலை எடுக்க வந்தனர்.
அப்போது பா.ம.க., வேலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சர் சண்முகம் தலைமையில் ஆம்புலன்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., க்கள் வேலுார் திருநாவுக்கரசு, காட்பாடி பழனி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு நாகேசின் உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். காட்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வேல்முருகன் கூறியதாவது: நகேஷ் ஆக்கரமிப்பு செய்துள்ள இடத்தினால் 6 தெருக்களை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். கிருஷ்ணன் கொடுத்த புகார்படி வருவாய் துறையினர் விசாரணை நடத்தி ஆக்கரமிப்பை அகற்றினர்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் என்ற முறையில் நான் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தேன்.
மற்றபடி நான் அவரை மிரட்டவில்லை. அரசியல் காஷ்புணர்சியால் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க., வேலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன், முன்னாள் மத்திய அமைச்சர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது: காட்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வேல்முருகன் ஏற்பாட்டின் பேரில்தான் நாகேசை விசாரணைக்கு அழைத்து கைது செய்ய திட்டமிட்டனர். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்ஏற்கனவே வேல்முருகன் அடியாட்களுடன் வந்து நாகேசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வேல்முருகனை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீதி கேட்டு போராட்டம்
பா.ம.க., மாவட்ட செயலாளர் இளவழகன் வெளியிட்ட அறிக்கை தி.மு.க., வினர் மிரட்டலால் நாகேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான தி.மு.க., வினரை கைது செய்யக் கோரி நாளை (27) ம் தேதி காலை 8:00 மணிக்கு வேலுார் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனை அருகில் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment