பாதிப்பு
ராட்சத இறக்கை ஏற்றிச் சென்ற
வாகனம் பழுது தேசிய
நெடுஞ்சாலையில் 3 மணி நேரம்
போக்குவரத்து பாதிப்பு
வாணியம்பாடி அருகே, ராட்சத இறக்கை ஏற்றிச் சென்ற வாகனம் பழுதடைந்ததால், தேசிய நெடுஞ்சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கோவை, தேனி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான ராட்சத இறக்கைகள் சென்னையில் தயாரிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மூலம் சாலை வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இது போன்ற வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் முன்னாலும், பின்னாலும் பாதுகாப்பிற்காக ஜீப்புக்களில் பொறியாளர்கள் செல்வார்கள்.
இந்நிலையில், சென்னையிலிருந்து ராட்சத இறக்கை ஒன்றை ஏற்றிக்கொண்டு கனரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 2:00 மணிக்கு வேலுார் வழியாக துாத்துக்குடிக்கு சென்றது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் பேட்டை மேம்பாலத்தின் மீது காலை 6:00 மணிக்கு சென்ற போது பாலத்தின் வளைவில் பழுதாகி நின்றது.
சாலையின் குறுக்கே ராட்சத இறக்கை நின்றதால் சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலையில் 10 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. வாணியம்பாடி டவுன் போலீசார் பாலத்தின் கீழ் பகுதி வழியாக போக்குவரத்தை திருப்பி விட்டனர். இதனால் அனைத்து வாகனங்களும் வாணியம்பாடி பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள் வழியாக சென்றதால் அப்பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாலத்தின் மீது ராட்சத வாகனம் நின்ற போது பைக்குகளில் சென்றவர்கள் அதன் மீது மோதி கவிழ்ந்தனர். இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் கனரக வாகனத்தில் வந்த பொறியாளர்களால் பழுது நீக்கப்பட்டு மதியம் 1:00 மணிக்கு சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டது.
அதே சமயம் 10 கி.மீ., துாரத்திற்கு சாலையின் இரு பக்கத்திலும் வாகனங்கள் நின்றதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மெதுவாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment