சாலை மறியல்
3 குழந்தைகளுக்கு அரசு
நிவாரணம் கேட்டு சாலை
மறியல்
ராணிப்பேட்டை
விபத்தில் தந்தை, தாய் இறந்ததால் அவர்களது மூன்று குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகரை சேர்ந்தவர் தீனதயாளன், 37. கட்டட தொழிலாளி. காவேரிப்பாக்கம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., பொருளாளராக பதவி வகித்தார். இவர் முதல் மனைவி கல்யாணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர்.
இதனால் கல்யாணியின் தங்கை ரூபாவதியை, 26, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று (15) இரவு 8:00 மணிக்கு பல்சர் பைக்கில் தீனதயாளனும், ரூபாவதியும் காந்திநகரில் இருந்து அரக்கோணத்திற்கு சென்றனர். அப்போது சோளிங்களில் இருந்து வெல்லம் ஏற்றி வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்திற்கு காரணமான சோளிங்கர் அண்ணாநகரை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் முகமது சலீம், 26, என்பவரை கைது செய்தனர்.
தம்பதிகள் இறந்ததால் அவர்களது மூன்று குழந்தைகள் அனாதைகளாகி விட்டனர். இதையறிந்த தீனதயாளனின் உறவினர்கள், பொது மக்கள் இன்று காலை 10:00 மணிக்கு அரக்கோணம் அருகே வேடல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், இறந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா 5 லட்சம் அரசு வழங்க வேண்டும், அவர்கள் 18 வயது அடைந்ததும் அரசு வேலை வழங்க வேண்டும், இதை ஏற்றுக்கொள்வதாக எழுதித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு, அரசின் விபத்து நிவாரணத்தொகை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், மதியம் 2:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அரக்கோணம்– சோளிங்கர் சாலையில் 4 மணி நேரம் போக்குவாரத்து பாதிக்கப்பட்டது.
Comments
Post a Comment