ஆர்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளது. இந்த இரு ஊராட்சிகளுக்கிடையே எல்லை மறு வரையறை தொடர்பான கடந்த சில மாதங்களாக பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும், இந்த ஊராட்சிகளுக்கிடையே உள்ள காஞ்சனகிரி மலை சிவன் கோயிலை நிர்வாகம் செய்வதிலும் இரு தரப்பினருக்கிடையே, பிரச்சனை நீடித்து வருகிறது. எல்லை மற்றும் கோயில் பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே, காஞ்சனகிரி மலைக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஒப்படைக்க அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணியினர் மற்றும் லாலாப்பேட்டை கிராம மக்கள், சிவபக்தர்கள் சார்பில் திருவாசகம், சிவப்புாரணம் பாடல்களை பாடி நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு, கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர்கள் ஜெகன், மோகன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சிவப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர். பழங்கால கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் சமாதானம் கூட்டம் நடத்தி, உரிய முடிவு எடுக்க வேண்டும். கோயிலை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தியும், சிவப்புராணம், திருவாசகம் பாடல்களை பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்து முன்னணியினர் தங்களின் கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முரளியிடம் மனுவை வழங்கினார்.
Comments
Post a Comment