சாதனை
டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறேன்
சிபிஎஸ்.இ பிளஸ் 2 வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி
காட்பாடி, மே.13-
டாக்டருக்கு படிக்க ஆசைப்படுவதாக சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் எடுத்த மாணவி ரேவா சுதர்சன்ராஜ் கூறினார்.
*சிருஷ்டி வித்யாஷ்ரம்*
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வேலூர் மாவட்டம், காட்பாடி வித்தியாஷ்ரம் பள்ளி மாணவி ரேவா சுதர்சன்ராஜ் 500 மதிப்பெண்ணுக்கு 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 99, கணிதம் 99, ஆங்கிலம் 99.மொத்த மதிப்பெண் 497 ஆகும்.
இவரை சிருஷ்டி பள்ளிகளின் குழும தலைவரும், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வருமான எம்.எஸ். சரவணன் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி மாணவி ரேவா பள்ளிக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று பாராட்டினார்.
*சாதனை மாணவர்கள்*
பள்ளியில் 486 மதிப்பெண் பெற்று மாணவர்கள் ஆதித்ய சிங்க நரேந்திரன், விஜித் ஆகியோர் இரண்டாம் இடமும்,
ரக்க்ஷனா ரவிசங்கர் 485 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 450க்கு மேல் 44 மாணவ, மாணவிகள் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர்கள், துணை முதல்வர் எப்சிபா, தலைமை ஆசிரியை கீதா, இணை கல்வி ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
*மாணவி பேட்டி*
மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரேவா சுதர்சன் ராஜ் கூறியதாவது;
நாங்கள் வேலூரில் வசிக்கிறோம்.என்னுடைய தந்தை பெயர் டாக்டர் சுதர்சன்ராஜ், தாய் டாக்டர் பிரியம்வதா. தங்கை ஹர்ஷிதா. சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
நான் எல்.கே.ஜி முதல் சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியில் படித்து வருகிறேன். நான் நன்றாக படிக்க என்னுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், தாத்தா, பாட்டி ஆகியோர் எனக்கு ஊக்கம் அளித்தனர். பள்ளியில் படிக்கும் போது பாடத்தில் எந்த சந்தேகத்தை கேட்டாலும் அதனை உடனே ஆசிரியர்கள் நிவர்த்தி செய்து வைத்தனர். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டாலே நாம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
*டாக்டருக்கு படிக்க ஆசை*
நான் நீட் தேர்வு எழுதி உள்ளேன். டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறேன். டாக்டருக்கு படித்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
*மாவட்டத்தில் முதலிடம்*
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் காட்பாடி சிருஷ்டி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ மாணவர்கள் வேலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய 152 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 500க்கு 495 மதிப்பெண் பெற்று மாணவி விபாநேத்ரா முதலிடத்தையும், 492 மதிப்பெண் பெற்று மாணவி வைஷ்ணவி 2ம் இடத்தையும், 491 மதிப்பெண் பெற்று மாணவர் சர்வேஷ் ஆனந்த், மாணவி ஜோஷிகா விஜயன் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 9 மாணவ, மாணவிகள் கணிதத்திலும், சமூக அறிவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ மாணவிகளை சிருஷ்டி பள்ளிகளின் குழும தலைவரும், சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வருமான எம். எஸ்.சரவணன் பூங்கொத்து, இனிப்பு வழங்கி பாராட்டினார்.
Comments
Post a Comment