பேட்டி
அரசு கூர்நோக்கு பாதுகாப்பு
இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு
உளவியல் ரீதியாக கவுன்சிங்
வேலுாரில்
தேசிய குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்
ஆனந்த் பேட்டி
வேலுார், ஏப். 22–
அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் தரப்படும் என வேலுாரில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.
வேலுார் மாவட்டம், வேலுார் காகிதப்பட்டறையில் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 27 ல் இரவு இங்குள்ள ஆறு சிறுவர்கள் காவலர்களை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். அடிக்கடி சிறுவர்கள் இல்லத்தில் உள்ள பொருட்களை உடைக்கின்றனர். இதையடுத்து டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் இன்று மாலை வேலுார் இல்லத்திற்கு வந்து ஆய்வு செய்து சிறுவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது ஆணைய உறுப்பினர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
வேலுார் அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பிச்சென்றது குறித்து ஆணையம் தாமாக முன்வந்து சம்மந்தப்பட்ட துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆணையத்தின் உறுப்பினர் என்ற முறையில் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தேன். அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே தமிழகத்தில் நான்கு என 21 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
வேலுார் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்களுக்குள்ளாகவே பிரச்சனை ஏற்பட்டு திட்டமிட்டே வெளியேறியுள்ளனர். இதையடுத்து இல்லத்தின் சுற்றுச்சுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தின் உள்ள சிறுவர்களிடம் பேசிய போது விளையாடுவதற்கும், தட்டச்சு பயிற்சி பெறுவதற்கும் நேரம் ஒதுக்கப்படுவதாகவும், ஓவியப்பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினர்.
இந்த இல்லம் சிறப்பாக செயல்படுகிறது. இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பிச்சென்ற விஷயத்தில் நிர்வாகத்தின் மீது தவறு இல்லை. போலீசார் தனிப்படை அமைப்பு தப்பிச்சென்ற ஒரு சிறுவரை தவிற மற்றவர்களை மீட்டுள்ளனர். அனைத்து இல்லங்களிலும் உள்ள சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் தரப்படும். இதற்கு
30 சிறுவர்களுக்கு ஒரு ஆலோசகர் நியமிக்க ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி., ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சஞ்சித், வேலுார் ஆர்.டி.ஓ., கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment