மோசடி
மொபைல் போனுக்கு பதில்
ஸ்பிக்கர் அனுப்பி வைத்து மோசடி
ஜோலார்பேட்டை, ஏப். 21–
ஜோலார்பேட்டையில், மொபைல் போனுக்கு பதில் ஸ்பிக்கர் அனுப்பி வைத்து மோசடி நடந்து வருகிறது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் அருணா, 30. இவருக்கு கடந்த வாரம் தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தங்களது மொபைல் எண்ணிற்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் பரிசாக விழுந்துள்ளதாகவும், இதற்கு 1,500 ரூபாய் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும், பணத்தை கொடுத்து விட்டு மொபைலை வாங்கிக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று தபால் அலுவலகம் மூலம் அவருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. தபால்காரர் 1,500 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை பெற்றுக்கொள்ளும்படி கூறியதால் அருணா பணம் கொடுத்து பார்சலை பெற்றுக்கொண்டார்.
பார்சலை பிரித்து பார்த்ததில், அதில் சின்ன ஸ்பிக்கர் ஒன்று இருந்தது. இதனால் தனக்கு வந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது பதில் வரவில்லை. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் அருணா புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவரை போல தினமும் ஏராளமானவர்களுக்கு இது போல பார்சல் வருவதாகவும், மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி போலீசார் கூறினர்.
Comments
Post a Comment