முற்றுகை
மாத்திரையில் கம்பி
ஆரம்ப சுகாதார நிலையம்
முற்றுகை
திருப்பத்துார், ஏப். 6–
வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்துார் மாவட்டம், வேப்பல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 45. விவசாயி. அவர் மகள் மோனிகா, 7. அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். மோனிகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்று பிற்பகல் 12:00 மணிக்கு அழைத்து வந்தனர்.
மோனிகாவை பரிசோதித்த டாக்டர்கள், பாராசிட்மால் மாத்திரையை கொடுத்து காலை, இரவு அரை மாத்திரை சாப்பிடும்படி கொடுத்தனர். வீட்டிற்கு சென்ற சக்திவேல், மாத்திரையை இரண்டாக உடைத்த போது அதில் கம்பி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மாத்திரையில் கம்பி இருப்பதை காட்டிய போது அங்கிருந்த செவிலியர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டர். ஆத்திரமடைந்த சக்திவேல் உறவினர்களோடு மதியம் 2:30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்துார் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செந்தில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் மாத்திரையில் கம்பி இருந்ததால் மீதி மாத்திரையை மோனிகாவுக்கு கொடுக்கவில்லை என சக்திவேல் கூறினார். பின் அங்கிருந்த பாராசிட்மால் மாத்திரைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு யாருக்கும் வழங்க வேண்டாம் என கூறப்பட்டது.
வேறு மாத்திரை வரவழிக்கப்பட்டு மோனிகாவுக்கு வழங்கப்பட்டது. கம்பி இருந்தது குறித்து பாராசிட்மால் மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் விளக்கம் கேட்டு அவர்கள் மீது புகார் செய்யப்படு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் மாலை 4:00 மணிக்கு ஆர்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்தது நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment