தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர், செப்.5-
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருவதாக நினைத்து தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என வேலூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
*அவசர செயற்குழு கூட்டம்*
வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
கலைஞர் நூற்றாண்டு விழாவுடன் கழகத்தின் பவள விழா, கட்சியின் முப்பெரும் விழாவை வேலூர் நடத்த வேண்டும் என தளபதி கூறியுள்ளார். இது வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை. மற்ற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வித்தியாசப்படுவது உண்டு.
திமுகவிற்கு இது பவளவிழா ஆண்டாகும் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தான் நூற்றாண்டை கடந்த கட்சி. அதற்கு அடுத்ததாக தி.மு.க. பவளவிழாவை கொண்டாடுகிறது.
75 ஆண்டுகளில் திமுகவில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஆகியோர் பொது செயலாளராக இருந்துள்ளனர். நான்காவதாக உங்கள் ஆதரவுடன் நான் பொதுச் செயலாளராக உள்ளேன். சாலை வசதி இல்லாத, பள்ளிக்கூடமே இல்லாத சிறிய ஊரில் பிறந்தவன் நான். எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த தொடர்பு வேறு யாருக்காவது இருந்தால் அவர்கள் முதலிலேயே அவருடன் சேர்ந்து இருப்பார்கள். என்னை அழைத்து எம்.ஜி.ஆர்., கேட்டார். அதற்கு நான் எனது கட்சி தி.மு.க., தலைவர் கலைஞர் என்றேன். அதற்கு நான் யார் என எம்.ஜி.ஆர் கேட்டார்.அதற்கு, நீங்கள் என்னை வாழ வைத்த தெய்வம் என்றேன். அதற்கு அடுத்த நாள் சட்டசபையில் என் தம்பி எவ்வளவு மன வலிமை படைத்தவன் என எம்.ஜி.ஆர். பேசினார். கட்சியில் ஏமாற்றம், அவமரியாதை, வெறுப்பு இருக்கும். அதே நேரத்தில் அவமானத்தையும், வெறுப்பையும், ஏமாற்றத்தையும் நினைத்திருந்தால் சவுகரியமாக நான் அவர்களிடத்தில் இருந்திருப்பேன். ஆனால் எனக்கு கட்சி மட்டும் தான் மலையாக தெரிந்தது. கட்சியில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி, பேசி வளர்ந்தவன் நான். கட்சியின் நான்காவது பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். இது ஒன்றே போதும் என் பரம்பரைக்கு. இவ்வளவும் கட்சியால் வந்தது. நம்மை விட கட்சி பெரியது. ஒண்ணும் செய்யவில்லையே என கட்சி தொண்டர்கள் கூறுகிறார்கள். ஒன்னும் பண்ண முடியாது. செய்தால், இது மட்டும் தானா என கேட்கிறார்கள். செய்யக்கூடாது என்பது இல்லை. கட்சியினருக்கு செய்து தான் ஆக வேண்டும். கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கூறுவதை கேட்டுக் கொள்வேன். அவற்றை தலைவரிடத்தில் கூறுவேன். பொதுச்செயலாளராக என்னுடைய கடமையை நான் செய்து வருகிறேன். வரலாற்று சிறப்புமிக்க விழாவான பவள விழா தி.மு.க வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும். அதில் வேலூர் மாவட்டம் இருக்கும். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., அந்த இடத்தை அந்த பெருமையைப் பெற வேண்டும். ஏற்றுக்கொண்ட பணியை செம்மையாக செய்பவர் அவர். கதிர்ஆனந்த் எம்.பி., உதவி செய்கிறேன் என்கிறார். அவரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பவள விழா கூட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் திரள வேண்டும்.
மோடி என்ன செய்கிறார் என அவருக்கே தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் உடனே வருகிறதா? அல்லது தள்ளி வைக்கிறாரா என தெரியவில்லை. தேர்தல் விரைவில் வர இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வருகிறதா என தெரியவில்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என நினைத்து நாம் களப்பணியாற்ற வேண்டும். பவளவிழா கூட்டம் முடிந்த பிறகு ஒவ்வொரு தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்த கூறியுள்ளேன். அதில் கட்சி தொண்டர்கள் கூறும் குறைகள் களையப்படும். தேர்தல் வருகிறதோ இல்லையோ நாம் அதற்கு ஆயத்தமாக வேண்டும். இவர் அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் பேசினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம். சுனில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய், முன்னாள் எம்.எல்.ஏ., சி.ஞானசேகரன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
*தீர்மானங்கள்*
வருகிற 17-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் தி.மு.க., தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பவள விழா, முப்பெரு விழா நடக்கிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
*இளைஞர் அணி மாநாடு*
வருகிற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடக்கிறது. இதில் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Comments
Post a Comment