கைதான முதல்வர்கள் மனைவிகள் சந்திப்பு

சிறையில் இருக்கும் முதல்வர்களின் மனைவிகள்: சுனிதா கெஜ்ரிவாலுடன்,  கல்பனா சோரன் சந்திப்பு

புதுடெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், "ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார்.

 சுனிதா கொஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்; துயரத்தை பகிர்ந்து கொண்டேன். எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். எங்களுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். ஜார்க்கண்ட்டின் ஆதரவை நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளேன். அவரை சந்தித்து ஜார்க்கண்ட் விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளேன். டெல்லி ராம் லீலா மைதானத்தில்  நடைபெற உள்ள இண்டியா கூட்டணியின் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன்" என தெரிவித்தார்.

சட்ட விரோத பண பரிமாற்றவழக்கு காரணமாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அவரை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. முன்னதாக, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வரானார்.

அரசு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர், அங்கிருந்தபடியே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்