இடம், வீடு, தங்கம் இல்லாத வேட்பாளருக்கு நோட்டீஸ்
இடம், வீடு, தங்கம் இல்லை ! கேரளா மார்க்சிஸ்ட் வேட்பாளரின் சொத்துக்கள் இதுதான்...; இவருக்கும் இ.டி. நோட்டீஸ்!
திருவனந்தபுரம்
புத்தகங்களையே அபூர்வமான சொத்தாக வைத்திருக்கும் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டாக்டர் தாமஸ் ஐசக். இவருக்கும் மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்து வருபவர் அம்மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்.
2016-21 வரையிலான முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். கேரளத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் தாமஸ் ஐசக், ’ யதார்த்தமான கம்யூனிஸவாதியாக செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு என சொந்தமாக வீடு கிடையாது, கால் சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை, தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் எதுவுமில்லை. அரசியல் தலைவர்களுக்கு, ஒரு முன்னோடியாக வாழ்ந்து வருபவர், டாக்டர் தாமஸ் ஐசக்.
ஆனால், ஐயன் திருவள்ளுவர் சொல்வது போல ஒருவருக்கு கல்வி தான் அழியாத செல்வம் என்ற எண்ணம் கொண்டவர் அவர்.
அதனால் தான் அவரிடம் அளவிட முடியாத செல்வம் குவிந்துள்ளது. அதுதான் அறிவுச்செல்வம். நீங்கள் நினைப்பது போல் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அல்ல.
ரூ. 9.6 லட்சம் மதிப்பிலான சுமார் 20,000 புத்தகங்களை தன்னுடைய ஒரே சொத்தாக அவர் பேணிப் பாதுகாத்து வருகிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் வீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் நூலகத்தில் தான் மலைபோல குவிந்துள்ளன புத்தகங்கள்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் அவரை பத்தனம்திட்டா தொகுதி மக்களவை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மக்களவைத் தேர்தலையொட்டி பத்தனம்திட்டா ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி, கருவூல வங்கிக் கணக்கில் அவருக்கு ரூ. 6,000, ஓய்வூதியதாரர் கருவூல வங்கிக் கணக்கில்ரூ. 68,000, பிற வங்கிக்கணக்குகளில் ரூ. 75,000, மொத்த வைப்புத்தொகையாக வங்கிக்கணக்கில் ரூ. 1.31 லட்சம், கையிருப்பாக ரூ. 10,000 வைத்துள்ளதாக அவர் தெரிவித்து இருப்பது வியப்பை அளிக்கிறது.
அமலாக்கத்துறை சமன்
இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தும் எளிமையான வாழ்க்கையை நடத்தி வரும் அவருக்கும் மசாலா பத்திரங்கள் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக கூறி, மத்திய அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக 6 முறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், தன் மீது என்ன குற்றச்சாட்டு என்பதை தெளிவு படுத்தினால் மட்டுமே விசாரணைக்கு ஆஜராவேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
தற்போதுதேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டாக்டர் தாமஸ் ஐசக் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment