கோபம்
கோபத்துக்கும் கோபம் வரும்
கோபப்படுகிறேன்.
கோபப்படக் கூடாதென
நான் எடுக்கும்
அதிகாலை முடிவுகளெல்லாம்
கோபத்தீயில் கருகும் போதும்,
விட்டு விட வேண்டுமென
பிடுங்கி எறியும்
விரலிடை
வெள்ளைச் சாத்தான்
பிடிவாத வேதாளமாய்
புகைந்து தொலைக்கும் போதும்,
யாரோ என்மேல் எறியும்
கோபக் கனல்கள்
வீட்டில்
மனைவி மேல் தெறிக்கும் போதும்,
எனக்கு நானே
கோபப்பட்டுக் கொள்கிறேன்.
என்னைத் தவிர யார்மீதும்
கோபப்படும் உரிமை
எனக்கில்லை.
என்
புலன்களுக்கே நான்
முடி சூடிய அரசனாக
முடியவில்லை
அடுத்தவன் சாம்ராஜ்யத்தில்
சக்கரவர்த்தியாவதெப்படி ?
‘எறியும் கோபம்
எரிக்கலாம்,
அடக்கும் கோபம்
வெடிக்கலாம்
புன்னகையால் கோபத்தைத்
துடைத்து விட்டுப் போகலாமே ! ‘
என
கவிதை எழுதினேன்
கோபம் அடங்கவில்லை.
என்
அஸ்திரங்கள் எல்லாம்
பூமராங் போலாகி
என்னையே துரத்தின.
பின்னொரு நாள்,
என் கடிவாளத்தின் முனையை
கடவுளிடம் கொடுத்தேன்,
இப்போது
லாடம் இல்லாப் பாதங்கள்
தீ மிதித்தாலும் சிரிக்கின்றன
கோபம் கெட்டதா ?
கோபத்திலிருந்து விடுபட இவை இரண்டும் போதும் !
Author: சேவியர்
VIEW ALL POSTS
TAGGED: இயேசு, கவிதை, கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவம், சேவியர், பைபிள், போதனைகள், மறைக்கல்வி,
உங்கள் கருத்தைச் சொல்லலாம்
Comments
Post a Comment