விழா
*தனக்கென்று ஓர் தனித்துவத்தை கொண்டிருக்கக் கூடிய மொழி தமிழ் மொழி : அமைச்சர் தங்கம் தென்னரசு*
விருதுநகர் மாவட்டத்தில் கரிசல் இலக்கியத்தைக் கொண்டாடும் மாபெரும் இலக்கியத் திருவிழாவாக திகழும் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2024’ இன்று துவங்கியது. இந்த விழாவில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி காணொளி காட்சி வழியாக விழாப் பேரூரையாற்றினார்.
இந்நிலையில் பேசிய நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டத்தின் இரண்டாவது கரிசல் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கரிசல் இலக்கிய திருவிழா என்பது இந்த பூமிக்கு நாம் செலுத்தும் மரியாதை. இம்மண்ணை சார்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இந்த மாவட்டம் என்றும் தலைவணங்கி நிற்பதற்கு சான்றாக இத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார்.
மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரவேற்று பாடிய மழையோடு இந்த கரிசல் இலக்கிய திருவிழாவை நாம் வரவேற்றுள்ளோம். நேற்றைக்கு முன்தினம் வரை சராசரி மழைப்பொழிவை விட குறைந்த அளவே நமது மாவட்டத்தில் பதிவாகி இருந்தது. ஆனால், நேற்று ஒரு நாள் பெய்த மழையில் விருதுநகர் மாவட்டம் மழை குறைவில் இருந்து மழை நிறைவை பெற்றிருக்கிறது. இதனால் மனம் குளிர்ந்திருக்கிறது, மழைப்பொழிந்து இருக்கிறது. இந்த சூழலில் இலக்கிய திருவிழா நமக்கு இன்னும் இன்பம் கூட்டுவதாக அமைந்திருக்கிறது.
ஏனெனில் இயற்கையில் இருந்து இலக்கியம் உருவாகி இருக்கிறது. காலமும், நிலமும் இலக்கியதை நமக்கு பண்டைய காலம்தொட்டு உருவாக்கி இருக்கிறது. இலக்கண வளர்ச்சியும், இலக்கிய செழுமையும் கொண்டிருக்கக்கூடிய மொழி என்ற பெருமையைப் பெற்ற மொழி தமிழ்மொழி. இன்னும் குறிப்பிட்டு சொன்னால் அசோகர் காலத்திற்கு முன்பாக 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனக்கென்று தனியாக ஒரு எழுத்தறிவை ஒரு எழுத்துமுறையை பெற்றிருக்கக் கூடியது தமிழ் இனம்.
தனக்கான மொழி நடை, எழுத்து நடை, தனக்கென்று ஓர் தனித்துவத்தை கொண்டிருக்கக்கூடிய மொழி தமிழ்மொழி. கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முன்பாக நாம் எழுத்தறிவு பெற்றுள்ளோம் என்பதை நமது தொல்லியல் ஆய்வுகள் இன்றைக்கு அறிவியல் பூர்வமாக சொல்லி இருக்கிறது.
ஆதன் என்கின்ற சொல் இன்றைக்கு கீழடியிலேயே காணப்படுகிறது. தொல்லியலிலேயே எங்கே சென்று பார்த்தாலும் ஆத்தனும், சாத்தனும் இருக்கிறார்கள். தொன்று தொட்டு வரக்கூடிய இம்மொழியின் வளர்ச்சியில் நமக்கு பல இலக்கியங்கள் உருவாகும்போது சங்க இலக்கியம் என்று உருவானது. சங்க இலக்கியத்திற்கு பிறகு எட்டாம் நூற்றாண்டில் நமக்கு பக்தி இலக்கியங்கள் உருவானது.
இப்படி இலக்கியங்கள் காலப்போக்கில் ஒவ்வொரு இலக்கியங்களாக மாறி, அது மறுமலர்ச்சி கால இலக்கியமாக வந்து 20-ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள் என்று பல்வேறு மாற்றங்களை இலக்கியங்கள் பெற்று வந்தாலும், அடிப்படையிலே நிலம் சார்ந்து இந்த இலக்கியங்களுக்கு ஒரு இலக்கணம் வகுக்கப்பட்டு இருக்கிறது. அதுதான் நமது ஐவகை நிலங்களின் திணைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு பல இலக்கியங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு திணையும் நிலத்தை குறிப்பதாக இருந்தது.
இடைசெவல் இரட்டையர்கள் கி.ரா. அவர்கள் மற்றும் கு.அழகிரிசாமி அவர்கள் புதிய மறுமலர்ச்சி கொண்டு வந்து மிக அற்புதமாக நம்முடைய கரிசல் இலக்கியம் என்று அறியக்கூடிய இந்த படைப்புகளை இப்பகுதியில் உருவாக்கினார்கள் என்று சொன்னால் அவர்களின் எழுத்துக்களும், எழுத்தாளர்களும் நம்மால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறேன்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.இராமகிருஷ்ணன் மல்லாங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவரிடம் மட்டும் இந்த மண்ணிற்கான கொண்டாட்டம் இருந்துவிடக்கூடாது நாம் அனைவரிடமும் அது இருக்க வேண்டும் என்பதே இந்த திருவிழாவின் நோக்கம் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுமான், சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன், மேயர் சங்கீதா இன்பம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கரிசல் இலக்கிய படைப்பாளிகள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment