தண்டனை
வேலூரில்
பெண் டாக்டரை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்
4 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு ஜெயில் தண்டனை
நியூஸ் 3 வேலூர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வந்தார். டாக்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார்.
படம் பார்த்துவிட்டு இரவு 12 மணி அளவில் அந்த வழியாக சத்துவாச்சாரியை வ உ சி நகரை சேர்ந்த பார்த்திபன் வயது 22 அவரது சகோதரர் பரத் என்கிற பாரா 20 ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோவில் ஆண் நண்பருடன் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து பாலாற்றங்கரைக்கு வர தெரிவித்தனர்.
ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்து பழைய பஸ் நிலையம் செல்வதற்கு பதிலாக பாலாற்றை நோக்கி சென்றது. இதனைக் கண்ட பெண் டாக்டரும் அவரது நண்பரும் கூச்சலிட்டனர். அதற்குள் ஆட்டோ பாலாற்றுக்குள் சென்றது.அப்போது அங்கிருந்த ஐந்து பேரும் கத்தியை காட்டி மிரட்டி பெண் டாக்டரின் நண்பரை விரட்டி அடித்தனர். பின்னர் ஐந்து பேரும் சேர்ந்து பெண் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் பெண் டாக்டர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை எடுத்துச் சென்று அதிலிருந்து ரூ 40 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து பெண் டாக்டர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து பார்த்திபன் அவரது சகோதரர் பரத் மற்றும் நேரு நகரை சேர்ந்த மணிகண்டன் (23),வ உ சி நகரை சேர்ந்த சந்தோஷ் என்கிற மந்தை (24) மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவனை கைது செய்தனர். இவர்கள் மீது பெண்ணை கடத்தி செல்வது கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவனை தவிர்த்து நான்கு பேரும் குற்றவாளிகள் என இன்று அறிவிக்கப்பட்டது.
மாலை ஆறு முப்பது மணிக்கு நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா தீர்ப்பளித்தார். அப்போது 13 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் 62 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 27 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். 62 ஆண்டு கால தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறியதால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 20 ஆண்டுகள் ஜெயிலில் தண்டனை அனுபவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை முடிந்து குற்றவாளிகளை போலீசார் வானில் ஏற்ற அழைத்துச் சென்றனர் அப்போது தண்டனை பெற்ற குற்றவாளிகள் பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்களை தாக்க முயன்றதால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
Comments
Post a Comment