அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்

*அனந்தனுக்கு ஆயிரம்* *திருநாமங்கள்*!

*விஷ்ணு* *ஸஹஸ்ரநாமக்கதைகள்*!!

நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

அந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து  விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 
1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.

322:*ப்ராணாய நமஹ*
(Praanaaya namaha)
(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

நாம் கடந்த சில திருநாமங்களின் விளக்கத்தில் பார்த்து வந்தது போல், அறநெறி தவறி ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களை
அழிப்பதற்காகத் தோன்றிய பரசுராமர், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.

அதன்பின், கச்யபர் உள்ளிட்ட முனிவர்களை வரவழைத்துப் பெரும் வேள்வியைச் செய்த பரசுராமர்,
மன்னர்களை வீழ்த்தித் தான் பெற்ற அனைத்து நிலங்களையும் அந்த முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டார்.

“இனி நீங்கள் எங்கே செல்வீர்கள்?” என்று முனிவர்கள் கேட்க,
“நான் எனக்கென்று புதிய நிலத்தை உருவாக்கப் போகிறேன்!” என்று சொன்னார் பரசுராமர்.

பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பரசுராமர், தன் கையில் ஏந்திய மழு எனும் ஆயுதத்தைக் கடலின் மீது வீசினார்.

உடனே, கடல் பல மைல் தூரம் பின் வாங்கிக் கொண்டு பெரும் நிலத்தைப் பரசுராமருக்கு வழங்கியது.

கடல் பின்வாங்கித் தனக்குச் சமர்ப்பித்த அப்பகுதியைப் பரசுராம க்ஷேத்திரம் என்று நிர்மாணித்தார் பரசுராமர்.

இன்றைய பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவா மாநிலத்திலிருந்து
கேரள மாநிலம் வரை பரசுராமரின் க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது.

“கலியுகத்தின் முடிவில் திருமால் கல்கியாக அவதாரம் எடுத்து வந்து தீய சக்திகளை அழிப்பார்!

அவர் அவதரித்து வரும் வரை 
நான் காத்திருந்து, அவரது செயல்பாடுகளில் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்!” என்று
முனிவர்களிடம் சொல்லி விட்டு அந்தப் பரசுராம க்ஷேத்திரத்தில் தங்கினார் பரசுராமர்.

தினமும் பொழுது விடியும் போது அங்கிருந்து புறப்பட்டு இமய மலைக்குச் செல்வார் பரசுராமர்.

பகல் முழுதும் இமய மலையில் தவம் புரிந்து விட்டு, சூரியன் அஸ்தமிக்கும் முன் மீண்டும் பரசுராம க்ஷேத்திரத்தை வந்து அடைவார்.

இவ்வாறு பரசுராமர் அங்கே எழுந்தருளியிருந்த நிலையில், ஒரு சமயம் மேற்குக் கடலில் ஆழிப் பேரலையும் புயலும் உண்டானது.

பரசுராம க்ஷேத்திரத்தில் வாழும் மக்கள் எல்லோரும் கடல் சீற்றத்தால் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் பரசுராமரை அடி பணிந்து, கடல் சீற்றத்திலிருந்து தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தார்கள்.

“என்னையே நம்பி என் பகுதியில் வாழும் உங்களை வாழ வைக்க வேண்டியது என் கடமை!

நீங்கள் அஞ்சாமல் சென்று வாருங்கள்!” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் பரசுராமர்.

கடல் அலைகள் பொங்கி நிலத்தை ஆக்கிரமித்த நிலையில், தனது மழுவைக் கடல்மீது ஏவினார் பரசுராமர்.

அந்த மழுவுக்குக் கட்டுப்பட்டுக் கடல் மீண்டும் தனது பழைய எல்லைக்குள் சென்று அடங்கியது.

ஆனால் உப்பு கலந்த கடல்நீர் ஊருக்குள் வந்தபடியால், அந்த நிலத்தில் பயிர்கள் ஏதும் விளையவில்லை.

மீண்டும் பரசுராமரின் உதவியை மக்கள் நாடினார்கள். 

நிலத்தில் உள்ள உப்பை நீக்கி விட்டால், விளைச்சல் நன்றாக ஏற்படும்என்று கூறிய பரசுராமர், 
நாக லோகத்தில் வாழும் பாம்புகளை அழைத்தார்.

பரசுராம க்ஷேத்திரம் முழுவதும் உள்ள உப்பினை நீக்குமாறு அப்பாம்புகளை ஏவினார்.

பாம்புகள் தங்கள் விஷத்தினாலே நிலத்திலுள்ள உப்பைச் சராசரி அளவுக்குச் சமன் செய்தன.

அதன்பின் அந்த மண்ணில் நல்ல விளைச்சலும் உண்டானது.

பரசுராம க்ஷேத்திரத்தின் மக்கள் பரசுராமருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.

“கடல் சீற்றத்திலிருந்தும் எங்களைக் காத்து, இங்கே பயிர்விளைச்சல் ஏற்படுவதற்கும் உதவிய உங்களுக்கு
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. 

எங்களுக்கு வாழ்வு அளித்தவரே நீங்கள்தான்!” என்று பரசுராமரைத் துதித்தார்கள்.

அப்போது பரசுராமர், “எனது பகுதியில் என்னை நம்பி வாழும் ஒவ்வொருவரையும் காக்க வேண்டியது என் கடமை!

நீங்கள் என்றுமே அஞ்ச வேண்டாம்!” என்று அவர்களுக்கு அபயம் தந்து அனுப்பி வைத்தார்.

‘ப்ராணன்’ என்று உயிர்வாயுவுக்குப் (oxygen) பெயர்.

உயிர்வாயு எப்படி நம் சுவாசத்துக்குப் பயன்பட்டு நம்மை வாழ வைக்கிறதோ, அதுபோல் தன்னை அண்டி வரும் மக்கள்
அனைவரையும் வாழ்விப்பவராகப் பரசுராமர் திகழ்வதால், அவர் ‘ப்ராண:’ என்றழைக்கப்படுகிறார்.

‘ப்ராண:’ என்றால் மூச்சுக்காற்று போல் இருந்து வாழ்விப்பவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 322-வது திருநாமம்.

சுவாசம், மூச்சுக்குழாய் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் மருந்து உட்கொள்ளும் வேளையில் “ப்ராணாய நமஹ:” 
என்று இத்திருநாமத்தைச் சொல்லி வந்தால், மருந்து விரைவில் வேலை செய்து,நோய் குணமடைவதற்குத் திருமால் அருள்புரிவார்.       ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்