வேலூர்

வேலூர் கோட்டம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ராமன் அளித்த சிறப்பு பேட்டி
எல்.ஐ.சி பங்கு விற்பனை – யாருக்கும் நல்லதல்ல . . .

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கான முன்மொழிவு ஆவணங்களை செபி என்று அழைக்கப்படுகிற  பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. பங்கு விற்பனை என்பது தனியார்மயத்தினுடைய முதல் கட்டம்.

ஒன்றிய அரசின் முயற்சிகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையாக எதிர்த்து போராடி வருகிறது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ஆர்.என்.மல்கோத்ராவின் தலைமையிலான குழு 1994 ம் வருடம் எல்.ஐ.சி நிறுவனத்தின் 50 % பங்குகளை விற்க வேண்டும் என்று பரிந்துரை அளித்த நாள் முதல் எங்கள் சங்கம் எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க போராடி வருகிறது.

பங்கு விற்பனைக்கான காரணம் என்ன?

ஒன்றிய அரசு வருவாய் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கிறது. பெரு முதலாளிகளுக்கான கார்ப்பரேட் வரியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வருவதும் அப்படி குறைக்கப்பட்ட வரியைக் கூட அவர்கள் செலுத்தாத போது அதை வசூலிக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தள்ளுபடி செய்வது போன்ற நடவடிக்கைகளால் வருவாய் பாதிக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு, அவசரகதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றால் மூடப்பட்ட சிறு,குறு தொழில்கள், அதனால் பெருகிய வேலையின்மை ஆகியவையும் வருவாய் இழப்பிற்குக் காரணம், இவற்றையெல்லாம் சரி செய்வதற்குப் பதிலாக பொதுத்துறை நிறுவனங்களை விற்று அரசை நடத்த பார்க்கிறது. இலக்கு நிர்ணயித்து விற்கிறது.

எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு சொல்லும் காரணங்கள் என்ன?

எல்.ஐ.சி யின் பங்குகள் சாதாரண மக்களுக்குச் செல்லும்.  செபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் செயல்பாடு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். மூலதனம் அதிகரித்தால் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றெல்லாம் அரசு சொல்கிறது. இவை அனைத்துமே தவறானது. மக்களை திசை திருப்பும் செயல்.

எல்.ஐ.சி யின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல எல்.ஐ.சி யின் வரவு செலவுக் கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. எனவே வெளிப்படைத்தன்மை என்பது ஏற்கனவே இருக்கிறது. அதே நேரம் செபியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பல நிறுவனங்கள், வங்கிகளில் நடைபெறும் எந்த மோசடி குறித்தும் செபிக்கு தெரியவே இல்லை. செபியிலேயே உள்ள தலைமை நிர்வாக அதிகாரி செய்த மோசடி கூட அவர்கள் கவனத்திற்கு வரவே இல்லை.

எல்.ஐ.சி சட்டம் திருத்தப்பட்டு எல்.ஐ.சியின் மூலதனம் 5 கோடி ரூபாயிலிருந்து 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்ட போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  ஒரு அரசியல் அற்புதமாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதாக எல்.ஐ.சிக்கு கூடுதல் மூலதனம் தேவைப்பட்டால் அது நாடாளுமன்ற அனுமதியோடு அரசின் நிதியிலிருந்துதான் வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த ஒருமித்த முடிவு இப்போது தன்னிச்சையாக மீறப்படுகிறது.

இப்போது எல்.ஐ.சி வசம் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு ரூபாய் கூட எல்.ஐ.சி நிறுவனத்துக்குக் கிடைக்கப்போவதில்லை. அவை அனைத்தும் அரசின் கஜானாவுக்குத்தான் செல்கிறது. செபிக்கு ஒன்றிய அரசு சமர்ப்பித்த முன்மொழிவில் இது தெளிவாக உள்ளது. ஆக இந்த பங்கு விற்பனை மூலம் எல்.ஐ.சி க்கு எந்த பயனும் இல்லை. மாறாக எல்.ஐ.சி க்கும் அதன் பாலிசிதாரர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். 

ஒவ்வொரு வருடமும் எல்.ஐ.சி நிறுவனம் ஈட்டுகிற உபரியில் 95 % பாலிசிதாரர்களுக்கு போனஸாக வழங்கப்படுகிறது. இப்போது அது 90 % ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதனால் பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.  அதனால் மறைமுகமாக வளர்ச்சியும் பாதிக்கப்படும். 

பாலிசிதாரர்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை என்பது பங்குதாரர்களுக்கான முன்னுரிமையாக மாறும். அவர்களுக்கு டிவிடெண்ட் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி நிறுவனம் “மக்கள் பணம் மக்களுக்கே’ என்ற கொள்கையில் இருந்து வழுவ வேண்டியிருக்கும். கிராமப்புறங்களில் கிளைகள் நடத்துவதும் சாமானிய  மக்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களும் காலப் போக்கில் மறைந்து போகும் அபாயம் உள்ளது. மக்கள் நலன் சார் முதலீட்டுக் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்ற கூக்குரலை தற்போதே பங்குச்சந்தைத் தரகர்கள் எழுப்பத் துவங்கி விட்டனர். அப்படி நிகழ்ந்தால் எல்.ஐ.சி நிறுவனம் தேசத்தின் கட்டமைப்புத் திட்டங்களில் செய்து வரும் முதலீட்டிற்கு பாதிப்பு வரும். அதன் மூலம் தேச நலன், மக்கள் நலன் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும்.

வெற்றிகரமான பொதுத்துறை நிறுவனத்துக்கு உதாரணமாக முப்பத்தி எட்டு லட்சம் கோடி ரூபாய் சொத்தோடு பாலிசிதாரர்களின் சேமிப்புக்கான உத்தரவாதத்தோடு மக்கள் நலத் திட்டங்களுக்கு அள்ளித் தரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கோ, பாலிசிதாரர்களுக்கோ, நாட்டுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் இம்முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி  05.03.2022 அன்று நாடு முழுதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகவும் பல்வேறு இயக்கங்கள் நடைபெறவுள்ளது.

தேச நலன், மக்கள் நலன் காக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்