ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை
வர்த்தக சமையல் எரிவாயு மீதான
ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக
குறைப்பதன் மூலம்
பிரச்சனைகளின் கடுமையை
மத்திய அரசு குறைக்கலாம்
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர்
வெங்கடசுப்பு கோரிக்கை
வேலுார்:
வர்த்தக சமையல் எரிவாயு மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைப்பதன் மூலம் ஓட்டல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளின் கடுமையை மத்திய அரசு குறைக்கலாம் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு கூறியுள்ளார்.
விலை உயர்வு:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றனர்.
கடந்த 22 ம் தேதி 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்டது. இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ 965.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான வர்த்தக சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதன்படி வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ 250 முதல் ரூ 270 வரை விலை உயர்ந்து விட்டது.
சென்னையில் 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 268.50 ஆக விலை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத விலையான ரூ 2137.50 லிருந்து ரூ 2406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ரூ 2253, மும்பையில் ரூ 2205, சேலத்தில் ரூ 2359.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு விலையேற்றம் இதுவே முதல் முறையாகும்.
இதனால் ஓட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை பலமடங்கு உயரும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் காய்கறி, மளிகை பொருட்கள் விலைகள் உயர்ந்து உணவகத் தொழிலை நடத்த முடியாமல் அதன் உரிமையாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதுவர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்திருப்பதால் ஓட்டல்களில் உணவு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் ஓட்டல்கள் உள்ளன.
தீர்வு:
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தலைவர் வெங்கடசுப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றின் தாக்கத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்புக்குள்ளாகிய உணவகத்தொழில் கடந்த இரண்டு மாதமாக ஓரளவு மீளத் தொடங்கியுள்ளது. இது சரியாக மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
அடுத்து வந்த கடுமையான சோதனை வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. ஏற்கனவே சமையல் உணவு எண்ணெய் விலையும், தொழிலாளர்கள் ஊதியமும் பல மடங்கு உயர்ந்து விட்டது.
இத்தகைய சூழ்நிலையில், உணவுத் தொழிலை நன்றாக நடத்த வேண்டுமானால், வாடிக்கையாளர் நலன், தரமான உணவு, ஓட்டல்கள் கட்டமைப்பு, ஊழியர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிரச்சனைகளை ஆய்வு செய்து முடிவுகள் எடுத்து அதற்கேற்றபடி உணவுத்தொழிலை நடத்த வேண்டும்.
இதனால் உணவுப் பண்டங்களின் விலைகளை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
வர்த்தக எரிவாயு மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைப்பதன் மூலம் உணவகத் தொழிலில் ஏற்பட்டுள்ள கடுமையான பிரச்சனைகளை மத்திய அரசு குறைக்கலாம்.
எனவே மத்திய அரசு இந்த பிரச்சனையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இது சம்மந்தமாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment