ஏழைகள் வயிற்றை நிரப்பும் மந்தார இலை
ஏழைகள் வயிற்றை நிரப்பும்
மந்தார இலை
ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் வேலை முடித்த கையோடு மந்தார இலைகள் தைப்பதை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். முன்பு ஊர் கதை பேசிக் கொண்டே தைப்பார்கள்.
இப்போது, டி.வி., பார்த்துக் கொண்டே தைக்கிறார்கள். நான்கு தலைமுறையாக செய்து வருகின்றனர். ஆந்திரா, உ.பி., ஒடிசா, சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து உற்பத்தியாகும் மந்தார இலைகளை வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு வருகிறது.
முதல் தரமான தைக்காத மந்தார இலை ஒரு கட்டு 200 ரூபாய் கொடுத்து வாங்கி , சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தி, நான்காக மடித்து பூந்துடப்பம் குச்சிகளைக் கொண்டு வட்டமாக தைக்கின்றனர்.
100 இலைகள் கொண்ட ஒரு கட்டு விலை 400 ரூபாய்.
சில்லரை கடைகளில் ஒரு மந்தார இலை 5 ரூபாய்க்கு விற்கின்றனர். ஒருவர் வீட்டில் தினமும் அங்குள்ள பெண்கள் எண்ணிக்கையை பொருத்து ஐந்து முதல் 10 கட்டுக்கள் மந்தார இலை தயாரிக்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
இழந்த சொத்துக்களை மீட்டுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பின்னர் அதற்கு மாற்றாக மந்தார இலை உள்ளது. மந்தார இலைகள் தயார் செய்து கொடுக்க நிறைய ஆர்டர்கள் வருகிறது.
ஒரு நாளைக்கு 5,000 ஆயிரம் இலைகள் தயாரிக்கப்பட்டது. 10 ஆயிரம் இலைகள் தயாரிக்கப்படுகிறது. அனைத்தும் சென்னைக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது.
இதிலுள்ள மருத்துவ குணங்கள் அறிந்து கொண்ட ஐரோப்பிய நாடுகளில் இப்போது மந்தார இலைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
மந்தாரை உள்ளவரை நொந்தாரை காண முடியாது என்றும் சீதபேதி, மூல வியாதியை குணப்படுத்த இந்த இலை உதவும் என மந்தாரை புகழ் பாடுகிறது சித்த மருத்துவம்.
தற்போது இலைகளை பதப்படுத்தி அழகான வடிவமைப்புக்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
மந்தார இலைகளை தமிழகத்தில் உள்ள வேளாண் காடுகளிலும், தோட்டங்களிலும் வளர்க்க வேண்டும். விவசாயிகள் மந்தார இலையை உற்பத்தி செய்து சந்தைபடுத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும்.
வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், 200 கிராமங்களில் ஒரு லட்சத்தி 10 ஆயிரம் பேர் இன்றளவும் வீடுகளில் மந்தார இலை தைத்துக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment