ஆன்மீகத்தின் சிறப்பு
தசாவதார பிரார்த்தனை...
1. வேதங்களை கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்த வலிமை மிக்க சோமகாசுரனை வதம் செய்வதற்காக மச்சாவதாரம் எடுத்து உலக உயிர்களை காத்தவனே..! துளசி மாலை அணிந்தவனே..! உன் திருவடிகளுக்கு வணக்கம்.!
2. அலைகளையுடைய திருப்பாற்கடலை அமிர்தம் வேண்டி கடைந்த போது தேவர்களின் உயிர் காப்பதற்காக மந்திர மலையைத் தாங்கும் ஆமை வடிவம் எடுத்தவனே..! உன் பாதங்களுக்கு வணக்கம்..!
3. பரந்த பூமியை பாயாகச் சுருட்டி பாதாளத்தில் மறைத்து வைத்த இரண்யாட்சனை வதம்; செய்வதற்காக கொம்புடையவராக அவதாரம் எடுத்து உலகை மீட்டவனே..! திருமகள் வீற்றிருக்கும் திருமார்பை உடையவனே..! உன் கமல பாதங்களுக்கு வணக்கம்..!
4. மலை போன்ற பெரிய மார்புடைய இரண்யனைக் கொன்று பக்தன் பிரகலாதனைக் காக்க தூணைப்பிளந்து கொண்டு வெளிவந்த நரசிம்ம மூர்த்தியே..! உன் பொற்பாதங்களுக்கு வணக்கம்..!
5. காஷ்யபருக்கும் அதிதிக்கும் புத்திரனாக பிறந்து ஆணவம் கொண்டிருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் மண் கேட்டு சென்று உலகை ஈரடியால் அளந்து மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்து ஆட்கொண்ட வாமனனே..! உன் செந்தாமரை பாதங்களுக்கு வணக்கம்..!
6. தவ வலிமை மிக்க ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து மறையோர்களை மதிக்கத் தவறிய அசுரர்களை முழவதுமாக அழித்து, வேதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பரசுராமனே..! ஐவகை ஆயுதங்களை ஏந்தியவரே..! உன் வெண்பஞ்சு பாதங்களுக்கு வணக்கம்..!
7. அயோத்தி மன்னர் தசரதருக்கும் கௌசல்யாவுக்கும் மகனாகப் பிறந்து, விஸ்வாமித்ர முனிவருடன் சென்று யாகத்தைக் காத்து அகலிகைக்கு சாப விமோவனம் தந்து, ஒருத்திக்கு ஒருவனாய் வாழ்ந்து ஒழுக்கம் பேணிய உத்தம ராமபிரானே..! நின் செங்கமலப் பாதங்களுக்கு வணக்கம்..!
8. வசுதேவருடைய மனைவியாகிய தேவகியின் வயிற்றில் மூன்று மாதங்களும் பிறகு அவரது இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் ஏழு மாதங்களும் தங்கியிருந்து பிறந்தவராகிய பலராமனே..! உயிர்களை காக்கும் சிறப்புடையவனே..! பளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்ட மனத்தை உடையவனே..! தூயவனே..! உன் தங்கத் திருவடிகளுக்கு வணக்கம்..!
9. வட மதுரை நகரில் வசுதேவர் தேவகி புத்திரனாய் பிறந்து, யமுனைக் கரையில் யசோதையிடம் வளர்ந்து, தயிரும் வெண்ணெயும் திருடி உண்டு, காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடி, கோபியருடன் கொஞ்சி மகிழ்ந்து இபாண்டவர்களுக்காக போராடி தர்மத்தை காத்த தனிப்பெருஞ் செல்வமான கிருஷ்ணா! உன் ஒளி பொருந்திய திருவடிகளுக்கு வணக்கம்..!
10. தேவர்கள் துதிக்க ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் குதிரையில் வரும் கல்கி அவதாரமே!
உனக்காக கொண்டு வந்த இந்த மலரை என் தும்பிக்கையின் சூடு பட்டு வாடுவதற்குள் வாங்கிச்செல் ஆதிமூலமே என்று கதறிய யானை வடிவிலான கஜேந்திர ஆழ்வாருக்கு உடனே வந்து அருள் செய்தவனே!
அன்பர்கள் விரும்பும் அனைத்தையும் கொடுத்தருளும் லட்சுமி நாராயணனே..! 🌺உன் திருவடிகளுக்கு வணக்கம்..!🌺
🙏ஓம் நமோ நாராயணா🙏
அனைவரும் விரும்புவது போல் வாழ வேண்டுமானால் பணமாகதான் நாம் பிறந்திருக்க வேண்டும்
🌹🌺““ *நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்ற காஞ்சி வரதராஜப் பெருமாள் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
---------------------------------------------------------------------
🌺🌹“ஒருமுறை திருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன்.
🌺இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று
சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார்.
🌺அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார்.
பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார்.
🌺பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள்.
நம்பியும் எடுத்து ஊட்டினார்.
🌺அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்தில் பாதி சர்க்கரைப் பொங்கல் காலியாகி இருப்பதையும்,
திருக்கச்சி நம்பியின் கையில் சர்க்கரைப் பொங்கல் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டார்.
🌺“என்ன காரியம் ஐயா செய்தீர்? பெருமாள் உண்ட மிச்சத்தைச் சாப்பிட வேண்டிய நாம் அவருக்கென்று
வைத்த பிரசாதத்தைச் சாப்பிடுவது நியாயமா?” என்று கேட்டார் அர்ச்சகர்.
🌺“சுவாமி! அடியேன் எதையும் சாப்பிடவில்லை. பெருமாள் தான் கேட்டார்! அவருக்கு ஊட்டி விட்டேன்!” என்றார் நம்பி. “இதென்ன புதுக்கதை! பெருமாள் என்றைக்கு ஐயா சாப்பிட்டிருக்கிறார்? நீர் தின்றுவிட்டு அவர் மேல் பழிபோடாதீர்!” என்றார் அர்ச்சகர்.
🌺செய்தியைக் கேள்வியுற்ற கோயில் அதிகாரிகள் அங்கே விரைந்து வந்தனர். பெருமாளுக்கென்று வைத்திருந்த பிரசாதத்தை நிவேதனத்துக்கு முன் எடுத்து உண்ட திருக்கச்சி நம்பிகள் இனிமேல் கோயிலுக்குள்ளேயே வரக்கூடாது என்று
தீர்மானம் நிறைவேற்றி அவரை வெளியே அனுப்பினார்கள்.
🌺வருத்தத்துடன் வீடு திரும்பினார் திருக்கச்சி நம்பிகள்.
இச்செய்தி ஊர் முழுவதும் பரவியதால், மக்கள் அனைவரும் திருக்கச்சி நம்பிகளைப் பலவாறு ஏசத் தொடங்கினார்கள்.
🌺“வரதா! மக்கள் என்னைத் தூற்றுவதைப் பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை! ஆனால் இப்படி ஒரு லீலை செய்து நான் உனக்குச் செய்துவரும் தொண்டை நடக்க விடாமல் செய்துவிட்டாயே!” என்று பெருமாளிடம் மனமுருகி வேண்டினார்.
🌺சில நாட்கள் கடந்தன. திருமலையிலிருந்து சில பக்தர்கள் வரதராஜப் பெருமாளுக்கு 100 கங்காளம் பொங்கலும் 100 கங்காளம் புளியோதரையும் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
🌺அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு
கோவிலுக்கு வந்து பிரசாதத்தை வரதராஜனுக்குச் சமர்ப்பிக்கையில் பெருமாள் அர்ச்சகரிடம்,
“திருக்கச்சி நம்பிகளை வரச்சொல்லுங்கள்! அவர் வந்தால் தான் நான் நிவேதனம் கண்டருள்வேன்!” என்றார்.
வேறு வழியில்லாமல் பூவிருந்தவல்லியிலிருந்து திருக்கச்சி நம்பிகளைக் காஞ்சிக்கு அழைத்து வந்தார்கள்.
🌺நூறு கங்காளம் பொங்கலும், நூறு கங்காளம் புளியோதரையும் பெருமாளின் முன்னே இருந்தன.
திருக்கச்சி நம்பிகளைக் கண்டதும் வரதராஜப் பெருமாள்,
“இவர் மட்டும் என்னுடன் இங்கே இருப்பார்.
🌺மற்ற அனைவரும் இங்கிருந்து செல்லுங்கள்! நாங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்ளப் போகிறோம்!” என்றார்.
அனைவரும் விலகிச் சென்றார்கள். கதவு தாளிட்டுக்கொண்டது.
🌺சிறிது நேரம் கழித்து, “இப்போது உள்ளே வாருங்கள்!” என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. கதவைத் திறந்துகொண்டு
பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்றார்கள். பார்த்தால் இருநூறு கங்காளங்களிலிருந்த பிரசாதமும் காணாமல் போயிருந்தது.
🌺அனைத்தையும் உண்ட களைப்பில் வியர்த்துப் போயிருந்த வரதனுக்குத் திருக்கச்சி நம்பிகள் சாமரம் வீசிக்கொண்டிருந்தார்.
“இருநூறு கங்காளங்களில் உள்ள உணவை ஒரு மனிதனால் இவ்வளவு சீக்கிரமாகச் சாப்பிட முடியுமா? உண்டவன் நான் தான்!” என்றார் வரதராஜன்.
🌺திருக்கச்சி நம்பிகள் குற்றமற்றவர் என்பதைக் கோயில் அதிகாரிகளும் பொதுமக்களும் உணர்ந்தார்கள்.
“திருக்கச்சி நம்பிகள் எப்போதும் போல் எனக்குச் சாமரம் வீசும் கைங்கரியத்தைத் தொடர்ந்து செய்வார்!” என்று
பெருமாள் திருவாய் மலர்ந்தருளினார்.
🌺தன்மீது ஒருமடங்கு அன்புகாட்டும் அடியவர்களின் மேல் பல்லாயிரம் மடங்கு அன்புகாட்டும் எம்பெருமானின் கருணையை எண்ணி மனமுருகி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் திருக்கச்சி நம்பிகள்.
வடமொழியில்
*“ரோதயதீதி ருத்ர:”* அழ வைப்பவனை ருத்ரன் என்று கூறுவார்கள்.
🌺தன் கருணையால் தன் அடியார்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்து அவர்களை அழ வைப்பதால் திருமால் *‘ருத்ர:’* என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 115-வது திருநாமம்.
🌺*“ருத்ராய நம:*
என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தன் அன்பையும் கருணையையும் திருமால் முழுமையாகக் காட்டி அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்படி அருளுவார். 🌹🌺
--------------------------------------------------------
ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்
Super new sir
ReplyDelete