செய்திகள்
வேலூர் அருகே
வனவிலங்கு வேட்டையாட வைத்திருந்த 3 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
வேலூர்,ஜூலை
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் நேற்று அரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியூர் அருகே உள்ள ஏரியில் 3 பேர் நாட்டு துப்பாக்கிகளுடன் நடமாடுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் தனிப்படை போலீசார் ஏரி பகுதிக்கு சென்று அங்கு சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து வந்து அரியூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அல்லேரி மலை கிராமத்தை சேர்ந்த சேட்டு (வயது 42), கோபி (37), ரஞ்சித் (27) என தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் இருந்த 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் முயல் பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியை வைத்திருந்ததாக தெரிவித்தனர்.
வேலூரில் வாகன சோதனையின் போது
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
வேலூர்,ஜூலை
வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சத்தியவாணி. நேற்று இரவு போலீஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது வேலூர், இன்பெண்டரி ரோடு, சூரியகுளம், மேட்டு தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 43). இவர் அண்ணா சாலை வழியாக ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்தார். வேகமாக வந்த ஆட்டோவை சப்- இன்ஸ்பெக்டர் சத்தியவாணி நிறுத்தி சோதனை செய்தார். மது போதையில் இருந்த ஆட்டோ டிரைவர் சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் இவரது மகன்களான யுவராஜ் ( 21 ),திவாகர் ( 20) ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்தார். விஜயன் மகன்களுடன் சேர்ந்து சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரமடைந்து தந்தை, மகன்கள் 3 பேரும் சேர்ந்து சப் இன்ஸ்பெக்டரை தாக்கி கீழே தள்ளினர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜயன் அவரது மகன்கள் யுவராஜ், திவாகர் ஆகியவுடன் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரை போதையில் இருந்த தந்தை மற்றும் மகன்கள் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூட்டு பிரச்சனைக்கு ஆர்தோஸ்கோபி மூலம் முதல் முறையாக வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
வேலூர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புன்னப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி(34). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையிலிருந்து வீடு நோக்கி செல்லும் போது எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கியதில் மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல உரிய பண வசதி இல்லாததால், வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மூட்டு ஜவ்வு பாதிப்பை சரி செய்ய ஆர்த்தோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டனர். தனியார் மருத்துவமனையில் ஏறத்தாழ சுமார் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சையை, அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நிபுணர் கிரிதரண் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த கோபி, அறுவை சிகிச்சை முடிந்த இரு தினங்களில் நடக்க தொடங்கியுள்ளார். அதிகப்பணம் செலவாகும் என மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து தனது கணவனை மீட்டுத் தந்துள்ளதாக குணமடைந்த கோபியின் மனைவி பெருமிதமாக தெரிவித்தார்
திருப்பத்தூர் பகுதியில் 3 வெவ்வேறு கடைகளில் ஒரே நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல்கள் ரொக்க பணம் சுமார் 50,000 கொள்ளை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் சந்தோஷ் இவர் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே விசிஎம் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான கடையில் கடந்த மூன்று வருடங்களாக மொபைல் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற சந்தோஷ் இன்று காலை வந்து கடையை திறக்க முற்பட்டபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த மொபைல்கள் மற்றும் ரொக்க பணம் ஐம்பதாயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அதே நபர் திருப்பத்தூர் வாணியம்பாடி ரோட்டில் உள்ள வேலன் மெடிக்கல்ஸ் கடையில் நுழைந்து 3000 ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துச் சென்று மீண்டும் அருகாமையில் உள்ள மோனி மொபைல்ஸ் கடையில் பூட்டை உடைத்து ஷட்டர் கதவை திறக்க முற்பட்டு அதை இழுக்க முடியாமல் அப்படியே விட்டு சென்றுள்ளார். ஒரு இரவில் ஒரே நபர் மூன்று வெவ்வேறு கடைகளில் மர்ம நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அருகே மலட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் பறிமுதல்.
ஒருவர் தப்பி ஓடிய நிலையில் நான்கு பேர் கைது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட நரியம்பட்டு மலட்டாரு பகுதியில் உமராபாத் காவல் ஆய்வாளர் கிஷோர் குமார் தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கைலாசகிரி பகுதியை சார்ந்த தியாகு, லோகு, ராஜ்குமார் மற்றும் லிங்கா, வெங்கடேசன் ஆகியோரை பிடித்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கைலாச கிரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தப்பி ஓடிய நிலையில் தப்பி ஓடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை மாடுகளுடன் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நான்கு நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்...
திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடையூராக இருந்த கணவனை தூங்கி கொண்டிருந்த போது தலையணையில் அமுக்கி கொலை செய்ய முயற்சித்த மனைவி மற்றும் கள்ளகாதலன் கைது உடந்தையாக இருந்த நபர் தப்பி ஓட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு சகாதேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேலு (37), சோனியா (27) தம்பதியினர் இவர்களுக்கு 3 பெண்பிள்ளைகள் உள்ளனர். சக்திவேல் டைலர் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) கட்டிட மேஸ்திரியான இவர் சக்திவேலுவுக்கு தூரத்து உறவு முறையில் அண்ணன் மகன் ஆவார். இதனால் ஆகாஷ் அடிக்கடி சக்திவேலின் வீட்டுக்கு சென்று வந்தாக கூறப்படுகிறது. அப்போது சோனியாவுக்கும், சக்திவேலுக்கும் இடையே 2 மாதங்களாக கள்ளக்காதல் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் சக்திவேல் வீட்டில் இல்லாதபோது இரண்டு பேரும் உல்லாசமாக தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சோனியாவின் நடத்தையில் சக்திவேலுவுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவி சோனியாவை அவர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். அப்போது தான் மனைவி சோனியாவுக்கும், ஆகாஷூக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு பழகி வந்தது அவருக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தனது மனைவியை கண்டித்து உள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சோனியா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு செல்வதும் பின்னர் சோனியாவின் பெற்றோர் மகளை சமாதானம் செய்து சக்திவேல் வீட்டில் வந்துவிட்டு செல்வதுமாக இருந்து வந்துள்ளனர். இதன்காரணமாக சோனியா ஆகாஷை பார்க்காமலும் அவருடன் தனிமையில் இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும் இருந்து வந்துள்ளார். அதேநேரம் தனது தவறான நடத்தை குறித்து கணவர் சக்திவேல் பெற்றோரிடம் போட்டு கொடுத்துவிட்டாரே என அவர்மீது சோனியா கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கணவர் சக்திவேல் உயிரோடு இருக்கும்வரை தன்னால் ஆகாஷூடன் இருக்கும் கள்ளக்காதலை தொடரமுடியாது. அதனால் சக்திவேலை கொலை செய்துவிட்டால் தனது கள்ளக்காதலுக்கு எந்த தடையும் இருக்காது என எண்ணி சோனியா கணவன் சக்திவேலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். மேலும் அந்த திட்டத்தை ஆகாஷூயிடம் கூறியுள்ளார். அதன்படி கடந்த 25ம் தேதி சக்திவேலுவை வீட்டில் வைத்து கொலை செய்ய சோனியா, ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த குமரவேல் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அதன்பின்னர் அன்று இரவு 10.30 மணிக்கு சோனியா ஆகாஷூக்கு போன் செய்து தனது கணவர் சக்திவேல் நல்லா அசந்து தூங்கி கொண்டு இருக்கிறார். இப்போது வந்தால் அவரை கொலை செய்துவிடலாம் என கூறியுள்ளார். அதன்பேரில் ஆகாஷூம், குமரவேலுவும் அங்கு சென்றுள்ளார். அப்போது தூங்கி கொண்டிருந்த சக்திவேலுவின் கால்களை சோனியா பிடித்துக்கொள்ள, குமரவேல் அவரது 2 கைகளையும் இறுக்மாக பிடித்துள்ளார். ஆகாஷ் தலையணையை எடுத்து சக்திவேலுவின் முகத்தில் வைத்து அமுக்கி உள்ளார். எப்படியோ அவர்களிடமிருந்து சக்திவேல் தப்பித்து கொண்டு வெளியே சென்று காப்பாத்துங்க காப்பாத்துங்க என கத்தியுள்ளார் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் 3 பேரும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குபதிவு அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆகாஷூம், சோனியாவும் வெளியூருக்கு தப்பி செல்ல திருப்பத்தூர் புதுப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தபோது போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேநேரம் தலைமறைவாக உள்ள குமரவேலுவையும் திருப்பத்தூர் கிராமிய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் உறவு முறையில் மகனாகவும், தன்னைவிட 6 வயது குறைவாகவும் உள்ள ஆகாஷூடன் தவறான உறவை வைத்து கொண்டு கள்ளக்காதலனுடன் தாலி கட்டிய கணவனையே கொலை செய்ய முயன்ற கலிகால கண்ணகி சோனியாவால் பேராம்பட்டு பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆற்காட்டில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓட ஓட வெட்டிய கொடூரம் - தப்பி செல்ல ஓடியும் விடாமல் 1 கிமீ தூரம் வரை துரத்தி சென்று வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
ஆற்காடு நகர போலீசார் விசாரணை..
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் சொந்தமாக ஆட்டோ கன்சல்டிங் மற்றும் உடற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ஆற்காடு கொல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் இடையே கடந்த 2024ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையில் மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, கார்த்தியை தனிப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கார்த்தி, இன்று காலை ஆற்காடு பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் நடத்தி வரும் ஆட்டோ கன்சல்டிங் கடைக்கு இருசக்கர வாகனம் வாங்குவது போல கஞ்சா போதையில் சென்றுள்ளார்.
அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவி, கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் செய்வது அறியாமல் தவித்த மணிகண்டன், பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் முக்கிய சாலையின் வழியே ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் துரத்தி சென்று ஆங்காங்கே அவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக ஒரு கடையில் தஞ்சம் அடைந்த மணிகண்டனை ஆற்காடு நகர போலீசார் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் கை கால் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் பலத்தை வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது ரத்தினகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டிய கார்த்திக்கை கைது செய்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார்த்திக் தனிநபராக வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாரேனும் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்று கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment